துபாய் மெட்ரோ ப்ளூ லைன் சேவை செய்யும் இடங்கள், பயண நேரம், வழித்தடம் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்..!!
துபாய் மெட்ரோவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் ஆகிய பாதைகளை இணைக்கும் புதிய 30 கிமீ ப்ளூ லைன் திட்டத்திற்கு கடந்த நவம்பர் 24ம் தேதி வெள்ளிக்கிழமை, துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முஹம்மது அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுமார் 18 பில்லியன் திர்ஹம் செலவில் நீட்டிக்க உள்ள இந்த புதிய பாதையில் 14 மெட்ரோ நிலையங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது நகரின் முக்கிய பகுதிகளை துபாய் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன், ப்ளூ லைன் திட்டம் நிறைவடைந்தவுடன் நகரின் போக்குவரத்து நெரிசல் 20 சதவீதம் குறையும் என்றும், மெட்ரோ நிலையங்களுக்கு அருகிலுள்ள நிலம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு 25 சதவீதம் வரை உயரும் என்றும் கூறப்படுகிறது.
ப்ளூ லைன் எப்போது முடிவடையும்?
துபாய் மெட்ரோவின் 20வது ஆண்டு நிறைவை ஒட்டி, வரும் 2029ம் ஆண்டில் இத்திட்டத்தை முடிக்க துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பாதை சேவை செய்யும் பகுதிகள்:
துபாய் மெட்ரோவின் புதிய ப்ளூ லைன் பாதையானது, துபாய் சர்வதேச விமான நிலையம் உட்பட பின்வரும் 9 முக்கிய பகுதிகளுக்கும் இடையே நேரடி இணைப்பை வழங்கும்.
- மிர்திஃப்
- அல் வர்கா
- இன்டர்நேஷனல் சிட்டி 1
- இன்டர்நேஷனல் சிட்டி 2
- துபாய் சிலிக்கான் ஒயாசிஸ்
- அகாடெமிக் சிட்டி
- ராஸ் அல் கோர் இண்டஸ்ட்ரியல் ஏரியா
- துபாய் க்ரீக் ஹார்பர்
- துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி
இந்த வழித்தடத்தில் மொத்தம் ஒன்பது வெளிப்புற நிலையங்கள் மற்றும் பூமிக்கு அடியில் ஐந்து நிலையங்கள் (underground stations) என மொத்தம் 14 நிலையங்கள் இருக்கும். மேலும், ப்ளூ லைனில் இருந்து வரும் ரயில்கள் துபாய் க்ரீக் கடல் பகுதியை 1,300 மீட்டர் அளவிலான மேம்பாலம் வழியாக கடக்கும்.
பயண நேரம்:
ப்ளூ லைன் பாதையில் இயக்கப்படவிருக்கும் மெட்ரோ ரயில்களுக்கு இடையேயான பயண நேரம் 10 முதல் 25 நிமிடங்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு முக்கிய பாதைகள்:
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) கூற்றுப்படி, ப்ளூ லைனுக்கான பாதைத் திட்டம் இரண்டு முக்கிய வழிகளைக் கொண்டுள்ளது.
முதல் பாதை:
முதல் பாதை அல் ஜதாஃப்பில் அமைந்துள்ள கிரீக் லைனில் உள்ள க்ரீக் இன்டர்சேஞ்ச் நிலையத்தில் தொடங்குகிறது. இது துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, துபாய் க்ரீக் ஹார்பர் மற்றும் ராஸ் அல் கோர் வழியாக, துபாய் இன்டர்நேஷனல் சிட்டி 1 ஐ அடைகிறது. டிரான்சிட் பயணிகளின் வசதிக்காக இது ஒரு இன்டர்சேஞ்ச் நிலையமாக அமைக்கப்படவுள்ளது.
பின்னர் இங்கிருந்து துபாய் இன்டர்நேஷனல் சிட்டி 2 மற்றும் 3 நோக்கி செல்லும் பாதை, துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் மற்றும் அகாடமிக் சிட்டி வரை நீண்டுள்ளது. மொத்தம் 21 கிமீ நீளம் கொண்டுள்ள இந்த பாதை 10 மெட்ரோ நிலையங்களையும் கொண்டுள்ளது.
இரண்டாவது பாதை:
ப்ளூ லைனின் இரண்டாவது பாதை அல் ரஷிதியாவில் உள்ள ரெட் லைனில் உள்ள சென்டர்பாயின்ட் இன்டர்சேஞ்ச் ஸ்டேஷனில் தொடங்கி, மிர்திஃப் மற்றும் அல் வர்கா வழியாகச் சென்று, துபாய் இன்டர்நேஷனல் சிட்டி 1 இன்டர்சேஞ்ச் நிலையத்தில் முடிவடைகிறது. இந்த பாதை 9 கிமீ நீளம் கொண்டது மற்றும் இந்த வழித்தடம் நான்கு மெட்ரோ நிலையங்களை உள்ளடக்கியது.
பயனடையும் பகுதிகள்:
RTA இன் படி, புதிய மெட்ரோ நீட்டிப்பு துபாயில் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு சேவை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2040ம் ஆண்டளவில் ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிராந்தியங்களுக்கு சேவை செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 2029ம் ஆண்டுக்குள் அகாடமிக் சிட்டியில் மட்டும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை 50,000 க்கும் மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel