துபாய்: கட்டுமானத் தளங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரச்சாரத்தை நடத்திய முனிசிபாலிட்டி!! பணியிட விபத்தை குறைக்க நடவடிக்கை…
துபாய் முனிசிபாலிட்டி, எமிரேட்டில் உள்ள கட்டுமானத் தளங்களில் பாதுகாப்புத் தரங்களை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரம், பொறியாளர்கள், ஆலோசகர்கள், மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் பாதுகாப்பான பணியிடத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக, கட்டுமானத் தளங்களில் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் காயங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, பணியிடங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு நிறுவனங்களை வலியுறுத்தும் நோக்கில் துபாய் முனிசிபாலிட்டி இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
தொழிலாளர்களின் பாதுகாப்பு:
இந்த முன்முயற்சி தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை வளர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக முனிசிபாலிட்டி சுட்டிக்காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கட்டுமானப் பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் தளங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்கான பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை முனிசிபாலிட்டி தொடங்கியுள்ளது.
மேலும், கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு தரநிலைகளை செயல்படுத்த பல புதுமையான வழிமுறைகளைப் பயன்படுத்துவதையும் முனிசிபாலிட்டி ஆதரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், கட்டுமான பாதுகாப்பு நடைமுறையின் குறியீட்டில் (Code of Construction Safety Practice) உள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க, கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. அந்தவகையில், நடப்பு ஆண்டில் சுமார் 14,858 கட்டுமான தளங்களில் 35,672 கள ஆய்வுகளை நடத்தியுள்ளது.
இதற்கிடையில், பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாஸ்ல் பகுதியில் வெளியேற்றும் பயிற்சியையும் (evacuation drill) முனிசிபாலிட்டி நடத்தியுள்ளது. இந்தச் பயிற்சியின் போது, தொழிலாளர்கள் சம்பவ இடத்திலிருந்து வெளியேறும்படியும், கட்டுமானத் தளத்தின் நியமிக்கப்பட்ட வெளியேற்றப் பகுதிகளில் ஒன்றுகூடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
இந்த நிகழ்வுகளுக்கு விரைவாக பதிலளிப்பதில் உத்தியோகபூர்வ மற்றும் உள் அதிகாரிகளின் வேகம், செயல்திறன் மற்றும் திறனை தீர்மானிப்பதே இந்த பயிற்சியின் முக்கிய குறிக்கோளாகும்.
இவற்றுடன் ஜெபல் அலி மற்றும் முஹைஸ்னாவில் பாதுகாப்பு கூடார நடவடிக்கையின் (Safety Tent Activity) கீழ் பல விழிப்புணர்வு கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் ஒர்க் ஷாப்புகளையும் துபாய் முனிசிபாலிட்டி நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel