துபாய்: டெலிவரி ரைடர்களுக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய 40 ஓய்வு இடங்கள்..!! துபாயின் முக்கிய பகுதிகளில் கட்டப்படும் என்று RTA தகவல்….
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) டெலிவரி ரைடர்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கும் சாலை விபத்துகளின் அபாயங்களைக் குறைப்பதற்கும் நகரம் முழுவதும் டெலிவரி ரைடர்களுக்காக குளிரூட்டப்பட்ட ஓய்வு பகுதிகளை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 40 ஓய்வு பகுதிகள் துபாயின் முக்கியப்பகுதிகளில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டெலிவரி ரைடர்கள் புதிய ஆர்டர்களுக்காகக் காத்திருக்கும் போது, பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த ஓய்வுப் பகுதிகளில் தங்கி ஓய்வெடுக்கலாம்.
துபாயில் 2022 இல் மோட்டார் பைக்கில் டெலிவரி சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2021 உடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகரித்து 2,891 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில், Deliveroo, noon, talabat மற்றும் பிற நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான டெலிவரி ரைடர்கள் தினசரி பல்வேறு பகுதிகளில் ஆர்டர்களை டெலிவரி செய்து வருகின்றனர். எனவே, இது அவர்கள் போதுமான ஓய்வைப் பெறுவதை உறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த முன்முயற்சி டெலிவரி வேலை செய்பவர்களின் மகிழ்ச்சி மதிப்பீட்டை அதிகரித்து, போக்குவரத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க அவர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வசதிகளுடன் கூடிய ஓய்வுப் பகுதிகள்:
துபாயின் RTA ஏற்கனவே அல் பர்ஷாவில் இரண்டு ஓய்வு பகுதிகளை கட்டி முடித்துள்ளது, மீதமுள்ளவை மூன்று கட்டங்களாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஓய்வு பகுதிகளும் ஜூலை 2024க்குள் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அரேபியன் ரஞ்சேஸ், இன்டர்நேஷனல் சிட்டி, பிசினஸ் பே, அல் குவோஸ், அல் கராமா, அல் சத்வா, அல் ஜடாஃப் மற்றும் மிர்டிஃப் மற்றும் அமீரகத்தின் பிற மாவட்டங்களில் பல ஓய்வு பகுதிகள் கட்டப்படும் என்பது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், டெலிவரி ரைடர்களுக்கான இந்த பிரத்யேக ஓய்வுப் பகுதியில் சிற்றுண்டி விநியோகம், தண்ணீர் மற்றும் மொபைல் போன் சார்ஜிங் நிலையம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இது ஒரே நேரத்தில் பத்து பேருக்கு இடமளிக்கும் மற்றும் அருகில் பார்க்கிங் இடங்களும் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக RTA இன் டைரக்டர் ஜெனரலும் தலைவருமான மேட்டர் அல் டேயர் அவர்கள் பேசுகையில், இந்த முயற்சி நாள் முழுவதும் அவசரமாக டெலிவரி செய்யும் டெலிவரி ரைடர்களுக்கு சரியான வேலை சூழலை வழங்குவதற்கான RTA இன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், போக்குவரத்து பாதுகாப்பில் துபாயை உலக அளவில் முன்னணியில் வைக்கும் நோக்கில் எமிரேட்டில் போக்குவரத்து பாதுகாப்பு உத்தியை செயல்படுத்த RTA ஆர்வமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel