அமீரக செய்திகள்

ஷேக் சையத் கிராண்ட் மசூதியில் தராவீஹ் தொழுகைக்கு அனுமதி.. சுற்றுலாவாசிகள் பார்வையிடும் நேரமும் வெளியீடு..!!

கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் வழிபாட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த அமீரகத்தின் பெரிய மசூதிகளான அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதி, அல் ஃபுஜைராவில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதி மற்றும் அல் ஐனில் உள்ள ஷேக் கலீஃபா கிராண்ட் மசூதி ஆகியவை இந்த வருடம் வழிபாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்காக ரமலான் மாதத்தில் திறந்திருக்கும் என்று பெரிய மசூதிகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெரிய மசூதிகளின் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அபுதாபியின் ஷேக் சையத் கிராண்ட் மசூதி மையம் திரளான பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்பதற்கான தயார் நிலைகளை நிறைவு செய்ததாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த ரமலான் மாதத்தில் பெரிய மசூதிகளில் தராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் தொழுகைகளை ஷேக் சையத் கிராண்ட் மசூதி இமாம்கள் இட்ரிஸ் அப்கர் மற்றும் யஹ்யா ஈஷான் வழிநடத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஃபுஜைராவில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதியிலும், அல் ஐனில் உள்ள ஷேக் கலீஃபா கிராண்ட் மசூதியிலும் தாராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் தொழுகைகளை ஓதுபவர்களின் பெயர்களை மையம் பின்னர் வெளியிடும் என்றும், ரமலான் மாத தாராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் தொழுகை அபுதாபி சேனலில் ஷேக் சையத் கிராண்ட் மசூதியிலிருந்து தினமும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அபுதாபி காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன், மசூதியின் தொழுகைக் கூடங்களுக்கு வழிபாட்டாளர்கள் சுமூகமாக வருவதற்கு, பல்வேறு திசைகளில் வாகனங்களை நிறுத்தவும், பல நுழைவாயில்களில் இருந்து மசூதிக்கு எளிதாக நுழையவும், வாகன நிறுத்துமிடங்களில் இருந்து பேட்டரி கார்கள் மூலம் போக்குவரத்து சேவையை வழங்கவும் இந்த மையம் உதவும் எனவும் கூறியுள்ளது.

வழிபாட்டாளர்களை தவிர சுற்றுலாவாசிகளுக்கும் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மசூதி திறக்கப்பட்டிருக்கும் என்றும், சுற்றுலாவாசிகள் சனிக்கிழமை முதல் வியாழன் வரை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் பின்னர் மீண்டும் இரவு 9.30 முதல் அதிகாலை 1 மணி வரை திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளது. அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும், பின்னர் இரவு 9.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும் திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் நடைபெறும் சிறப்பு தஹஜ்ஜுத் தொழுகையை வழிபட்டாளர்கள் கடைப்பிடிக்க, சுற்றுலாவாசிகளுக்கான பார்வையிடும் நேரம் வாரத்தில் ஏழு நாட்களும் இரவு 11.30 மணியுடன் முடிவடையும் என்றும் பெரிய மசூதிகளின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!