அமீரக செய்திகள்

UAE: கோலாகலமாக துவங்கும் ஷேக் சையத் ஃபெஸ்டிவல்..!! குடியிருப்பாளர்களுக்கு இலவச பேருந்து சேவை..!!

அபுதாபியின் அல் வத்பாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் இந்த வருடம் இன்று முதல் தொடங்கவிருக்கின்றது. இந்த ஷேக் சையத் ஃபெஸ்டிவல் 2021க்கு பொதுமக்கள் பயணம் செய்ய இலவச பேருந்து சேவைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியவரான மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பெயரிடப்பட்ட இந்த திருவிழா இன்று தொடங்கி ஏப்ரல் 1, 2022 வரை நடைபெறவுள்ளது.

4,500 க்கும் மேற்பட்ட கலாச்சார நிகழ்வுகள், 650 பல்வேறு நிகழ்வுகள் மற்றும் குழந்தைகளுக்கான 130 க்கும் மேற்பட்ட வொர்க்‌ஷாப் ஆகியவற்றுடன், உலகம் முழுவதிலுமிருந்து 22,500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் பங்கேற்க வருவார்கள் என கூறப்படுகின்றது.

பல்வேறு சர்வதேச நாட்டுப்புறவியல் அரங்குகள், கலாச்சார நிகழ்வுகள், கச்சேரிகள், வாட்டர் மற்றும் லேசர் ஷோக்கள், வானவேடிக்கைகள், கார் ஷோ, ஐஸ் ஸ்கேட்டிங் ரிங்க், க்ளோ கார்டன் மற்றும் அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் பலவகையான நடவடிக்கைகள் இந்த ஃபெஸ்டிவலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் காண செல்லும் குடியிருப்பாளர்களுக்கு அபுதாபியின் பிரதான பேருந்து நிலையம் (பிற்பகல் 3 மணி), கூட்டுறவு சங்கம் (cooperative association) (பிற்பகல் 3.30 மணி) மற்றும் பனியாஸ் பேருந்து நிலையம் (மாலை 4 மணி) ஆகிய நிறுத்தங்களில் 30 நிமிட இடைவெளியில் இலவச வழக்கமான பேருந்து சேவைகள் கிடைக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு செல்வதற்கான நுழைவுச் சீட்டுகள் ஒரு நபருக்கு 5 திர்ஹம் ஆகும். மேலும் மாற்றுத்திறனாளிகள், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவசம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள், சமூக இடைவெளி அறிவுறுத்தல்கள், முக கவசம் அணிதல் மற்றும் திருவிழா பணியாளர்களின் அவ்வப்போது சோதனைகள் உள்ளிட்ட பாதுகாப்பிற்கான தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அனைத்து பார்வையாளர்களும் எல்லா நேரங்களிலும் முக கவசங்களை அணிய வேண்டும், பாதுகாப்பான தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மற்றும் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் நிலையைக் காட்டுவதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வார நாட்களில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையிலும், வியாழன், வெள்ளி மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் மாலை 4 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!