அமீரக செய்திகள்

துபாயில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.. 40 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும் மெட்ரோ, டிராம் சேவைகள்..!!

2024ம் ஆண்டு தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் துபாய் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில் அமீரக குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் சிறப்பு கொண்டாட்டங்கள் மற்றும் கண்கவர் வானவேடிக்கைகளைக் கண்டுகளிக்க தயாராகி வருகின்றனர்.

அவ்வாறு புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும் இடங்களுக்கு பயணிக்கத் திட்டமிடும் மக்களுக்காகவே துபாய் மெட்ரோ மற்றும் டிராம் ஆகிய இரண்டு சேவைகளும் புத்தாண்டு தினத்தன்று நீண்ட காலத்திற்கு இயக்கப்பட உள்ளதாக RTA அறிவித்துள்ளது. அத்துடன் 230 பேருந்துகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவும் RTA திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த இரண்டு போக்குவரத்து சேவைகளும் டிசம்பர் 31ம் தேதி முதல் 40 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேரங்கள்:

  • துபாய் மெட்ரோ: டிசம்பர் 31ம் தேதி காலை 8 மணி முதல் ஜனவரி 1ம் தேதி இறுதி வரை
  • துபாய் டிராம்: டிசம்பர் 31ம் தேதி காலை 9 மணி முதல் ஜனவரி 2ம் தேதி அதிகாலை 1 மணி வரை

இது குறித்து RTA இன் CEO அப்துல்லா யூசுப் அல் அலி அவர்கள் பேசுகையில், நீட்டிக்கப்பட்ட மெட்ரோ மற்றும் டிராம் சேவைகள், கூடுதல் பார்க்கிங் இடங்கள் மற்றும் இலவச பேருந்து பயணங்கள் ஆகியவற்றின் மூலம் RTA பொதுமக்களுக்கு வசதியான போக்குவரத்து விருப்பங்களை வழங்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

இவற்றுடன் வழக்கமான டாக்ஸி சேவைகளும் புத்தாண்டு ஈவ்னிங் காலத்தில் தொடர்ந்து செயல்படும் என்று கூறிய அல் அலி, RTA துபாயின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் அதன் குடிமக்கள் மற்றும் விருந்தினர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் பார்க்கிங் வசதிகள்:

மெட்ரோ, டிராம் மற்றும் இலவச பேருந்து சேவை போன்ற வசதிகளுடன் கொண்டாட்டங்களைக் காண வருபவர்களுக்கு போதுமான வாகன நிறுத்துமிடத்தை உறுதி செய்வதற்காக, அல் வாஸ்ல் மற்றும் அல் ஜாஃபிலியாவில் சுமார் 900 கூடுதல் பார்க்கிங் இடங்களையும் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

சாலை அடையாளங்கள்:

இது தவிர பண்டிகைகளின் போது சுற்றுலாப்பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு உதவும் வகையில், சாலைகளில் வழிகாட்டும் அடையாள அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அல் அலி தெரிவித்துள்ளார். மேலும், சாலை மூடல்கள், மாற்று வழிகள் மற்றும் திறந்த பாதைகள் பற்றிய தகவல்களை வழங்க நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் (ITS) மூலம் இயங்கும் செய்தி பலகைகளும் வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!