அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் நிறுவனத்தின் பெயரில் முதலீடு திட்டம்.. குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விமான நிறுவனம்..!!

துபாயை தளமாக கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், அதன் பெயரைப் பயன்படுத்தி முகநூலில் பரவிவரும் மோசடியான முதலீட்டுத் திட்டம் குறித்து குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனத்தின் CEO மற்றும் விமானத்தின் புகைப்படங்களைக் கொண்ட எமிரேட்ஸ் பங்குகளில் முதலீடு செய்வதற்கான புதிய தளத்தை அறிமுகப்படுத்தியதாக உலாவரும் செய்தி பொய் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.

அந்த போலியான தளத்தில் முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 10 சதவீத மாதாந்திர வருமானம் அளிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதாவது, “$200 இல் தொடங்கும் எமிரேட்ஸ் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு $9700 சம்பாதிக்க உங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது” என்ற கோரிக்கையுடன் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சமூக ஊடகங்களில் பரவும் போலி முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விமான நிறுவனத்தின் எந்தவொரு அறிவிப்புகளும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சேனல்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த போலியான பதிவு கடந்த வாரம் முதல் முகநூலில் வலம் வருகிறது, இதற்கு பதிலளிப்பவர்கள் https://trademasterhub.com/ என்ற இணையதளத்தின் பதிவுப் பக்கத்திற்கு செல்வார்கள். அதில் “உங்களுக்கு ஒவ்வொரு அடியிலும் வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம். தொடங்குவதற்கு, நீங்கள் விரும்பும் மொழியுடன் தொடர்புடைய கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும். இது உங்களைப் பதிவுப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். தனிப்பட்ட விவரங்கள் மற்றும் உங்கள் முதலீட்டு பயணத்தைத் தொடங்குங்கள்” என்று பயனர்களுக்கு உறுதியளிக்கப்படுகிறது.

அந்தப் படிவத்தை பூர்த்தி செய்தவுடன், பங்கேற்பாளர்கள் 24 மணி நேரத்திற்குள் திரும்ப அழைப்பதற்கான உறுதிமொழியுடன் நன்றிக் குறிப்பையும் பெறுவார்கள்.அழைப்பின் போது, ​​ஒரு ஆலோசகர் ஒரு கணக்கைத் திறந்து செயல்படுத்துவதற்கு உதவி செய்வார். அழைப்பைப் புறக்கணிப்பவர்களுக்கு, பதிவுச் செயல்முறையின் முடிவில், “எங்கள் அழைப்பிற்குப் பதிலளிக்கத் தயாராக இருங்கள், ஏனென்றால் உங்களுக்காக போனஸ் காத்திருக்கிறது” என்ற செய்தி அனுப்பப்படுகிறது.

இந்த போலியான தளம் ஒரு மாதமே பழமையானது என்றும் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக துபாயில் ஒரு இந்திய ரியல் எஸ்டேட் முகவர் ஒரு மோசடி வர்த்தக தளத்தில் $100,000 இழப்பை சந்தித்ததாக சமீபத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. மேலும், ஷார்ஜாவில் வங்கியில் பணிபுரிந்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆர்.இம்ரான் என்பவர் 21,000 டாலர்களை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

மோசடி செய்பவர்கள் போலியான தளங்களில் சட்டப்பூர்வமான ஒரு மாயையை உருவாக்குவதற்கு மார்பிங் செய்யப்பட்ட படங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக, 2021 ஆம் ஆண்டில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் துபாயை தளமாகக் கொண்ட ஃபின்டெக் தளத்தில் 50 மில்லியன் திர்ஹம் முதலீடு செய்ததாக ஒரு மோசடியான விரைவான பணக்காரர் திட்டம் பொய்யாகக் கூறப்பட்டது.

நீங்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள் அல்லது நம்பகமான இணையதளத்தில் உலாவும்போது, ​​முதலீட்டுத் திட்டத்தில் இருந்து குறிப்பிடத்தக்க வருவாய்களைப் பற்றிய கவர்ச்சியான தலைப்புடன் ஒரு பிரபலத்தின் படத்தைக் காண்பீர்கள். நீங்கள் அதை ஆர்வமாக கிளிக் செய்தால், பிரபலம் பெற்ற லாபத்தை விளக்கும் மூன்றாம் தரப்புப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

தொடர்ந்து, உங்கள் விவரங்களை உள்ளிட்ட பிறகு, ஒரு நிதி மேலாளர் உங்களைத் தொடர்புகொண்டு, ஆரம்ப முதலீட்டை வலியுறுத்துவார். நீங்களும் ஆவலாக, அந்த வர்த்தக தளத்திற்கான இணைப்பு மற்றும் உள்நுழைவு விவரங்களைப் பெற்று முதலீடு செய்வீர்கள். உங்கள் முதலீடுகள் வளரும், உடனே பேராசையில் அதிக பணத்தை முதலீடு செய்வீர்கள். ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட நிதி உங்களுக்கு ஒருபோதும் வராது, எதிர்பார்க்கப்படும் அழைப்பும் வராது. இப்படித்தான் பலரும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!