அமீரக செய்திகள்

UAE: தங்கள் வீட்டுப் பணியாளர்களை மற்றவர்களுக்கு வேலை செய்ய அனுமதித்த 153 முதலாளிகளுக்கு 50,000 திர்ஹம் வரை அபராதம்!! MoHRE விடுத்த எச்சரிக்கை….

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கள் வீட்டுப் பணியாளர்களை மற்றவர்களிடம் வேலை செய்ய அனுமதித்த 153 முதலாளிகளுக்கு 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விதிமீறலின் காரணமாக அந்த முதலாளிகளின் கோப்புகளையும் தடுத்துள்ளதாக மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இந்த சட்டவிரோத நடைமுறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக MoHRE வெளியிட்ட ஆலோசனையில், சட்டவிரோத வீட்டுப் பணியாளர்களை பணியமர்த்துவது அல்லது அவர்களின் நிலையைத் தீர்க்காமல் மற்றவர்களுக்கு வேலை செய்பவர்களை வேலைக்கு அமர்த்துவது போன்றவற்றிற்கு எதிராக முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இது சட்டங்களின் வெளிப்படையான மீறல் என்றும், முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உடல்நலம் மற்றும் சமூக அபாயங்களை ஏற்படுத்தும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது, இந்த விதிமீறல்களில் ஈடுபட்ட முதலாளிகள் நிர்வாக அபராதங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், அவர்களால் புதிய வீட்டுப் பணியாளர் அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும், அவர்களின் வழக்கு பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அவர்கள் மீது 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்ட மற்றும் நிதித் தடைகளும் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022 இல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் ஆணைச் சட்டத்தின்படி, அமீரகத்தில் அனுமதியின்றி வீட்டுப் பணியாளர்கள் வேலை செய்யக் கூடாது. மேலும், சில நிபந்தனைகளுக்கு இணங்காமல், தங்கள் நிலையைத் தீர்த்துக் கொள்ளாமல் அவர்களால் வேறு வேலைகளைச் செய்ய முடியாது. இந்த விதிமுறைகளை மீறினால் அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, “MoHREயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் பட்டியலிடப்பட்டுள்ள உரிமம் பெற்ற வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு ஏஜென்சிகளுடன் பிரத்தியேகமாக கையாள்வதற்கு முதலாளிகளை நாங்கள் அழைக்கிறோம்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏஜென்சிகள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் செயல்படுகின்றன, இது எமிராட்டிகள் மற்றும் குடியுரிமைக் குடும்பங்கள் உட்பட முதலாளிகளுக்கு சிறந்த சேவைகளை உத்தரவாதப்படுத்த உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் 600590000 என்ற எண்ணிற்கு டயல் செய்வதன் மூலம் சட்டவிரோத நடைமுறைகள் அல்லது வீட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு ஏஜென்சிகள் தொடர்பான ஏதேனும் கருத்துக்களைப் புகாரளிக்கலாம் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!