UAE: அல் அய்னை தாக்கிய ஆலங்கட்டி மழை!! பல கார்கள் சேதம்….!!

அமீரகம் முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மோசமான வானிலையுடன் கன மழை பெய்து வருகிறது. அதில் அபுதாபியின் அல் அய்ன் நகரில் நேற்றிரவு ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை தெருக்கள் முழுவதும் சிதறிக்கிடந்த மிகப்பெரிய ஆலங்கட்டிகளைக் கண்டு குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாட்டில் மோசமான வானிலை நிலவி வருவதால், பொதுவாக இதுபோன்ற காலநிலையின் போது ஆலங்கட்டி மழை பெய்யும். ஆனால், தற்பொழுது அல் அய்னை தாக்கிய தீவிரமான ஆலங்கட்டி மழை குடியிருப்பாளர்களின் கார்கள், ஜன்னல்கள் மற்றும் சுற்றுப்புறங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இதனிடையே, அமீரகத்தின் மிகவும் பிரபலமான புயல் அல்லது மோசமான வானிலை நிலவும் பகுதிகளுக்கு செல்ல ஆர்வமுள்ளவரான ஃபஹத் முகமது அப்துல் ரஹ்மான் என்பவர், அந்தப் பகுதியின் குடியிருப்பாளர்கள் வீதி முழுவதும் வெள்ளை நிற ஆலங்கட்டிகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு வியப்படைந்த அழகிய காட்சிகள் அடங்கிய பல வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோக்களில், ஆலங்கட்டி மழை பலமாகப் பொழிவதையும், ஆலங்கட்டி மழையால் மூடப்பட்ட குன்றுகளில் கார்கள் ஓட்டுவதையும் காணலாம்.
இவ்வாறு மோசமான காலநிலையின் அழகை உற்சாகமாக அனுபவித்த போதிலும், சில குடியிருப்பாளர்கள் புயலின் கடுமையான தன்மையைக் கண்டு கவலைப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மற்றொரு வீடியோவில், சில கார்கள் ஆலங்கட்டி மழையால் டயர்கள் வரை தரையில் புதைந்து கிடப்பதைக் காணலாம்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய சுஜித் குமார் என்ற இந்தியர், அதிகாலை 5 மணியளவில் பலத்த மழை மற்றும் காற்றுடன் புயல் தொடங்கியதாகவும், இது அனைத்து முன் மற்றும் பின் கண்ணாடி பேனல்களை சேதப்படுத்தியதுடன் பல கார்களில் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel