அமீரக செய்திகள்

UAE: அரபு பிராந்தியத்தில் முதன் முதலாக ‘சீவேர்ல்டு அபுதாபி’ படைத்த புதிய சாதனை..!!

ஐக்கிய அரபு அமீரகம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் உலகளாவிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அந்தவகையில், இந்தாண்டும் ஏராளமான சாதனைகளை அமீரகம் முறியடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட துபாயில் கட்டப்பட்டுள்ள One Zabeel கட்டிடமும் அதன் வடிவமைப்புக்காக உலக கின்னஸ் சாதனையில் இடம்பிடித்து சாதனை படைத்தது.

அந்த வகையில், தற்போது அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள ‘SeaWorld Yas Island’ எனும் கடல்வாழ் தீம் பார்க், உலகின் மிகப்பெரிய உட்புற கடல்வாழ் உயிரின தீம் பூங்கா என்ற சாதனையைப் படைத்துள்ளது. பூங்காவின் இந்த சாதனைக்கான சான்றிதழ் மிரால் (Miral) குழுமத்தின் CEO மற்றும் சீவேர்ல்ட் அபுதாபி தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீவேர்ல்டு யாஸ் ஐலேண்ட் அபுதாபியின் மேலாளர் தாமஸ் கஃபர்லே பேசுகையில், “இந்த மதிப்புமிக்க சாதனையானது, அனைத்து வயதினரும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கையான அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உலகின் மிகப்பெரிய விலங்கு நல அமைப்பான குளோபல் ஹியூமனால் (Global Humane) சான்றளிக்கப்பட்ட அரபு பிராந்தியத்தின் முதல் இடமாகவும் அபுதாபியின் கடல் வாழ் பொழுதுபோக்கு பூங்காவான சீவேர்ல்டு யாஸ் ஐலேண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீவேர்ல்டு யாஸ் ஐலேண்ட்:

அபுதாபியில் யாஸ் ஐலேண்ட் பகுதியில் சுமார் 183,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சீவேர்ல்டு யாஸ் ஐலேண்ட் பூங்கா, 100,000 க்கும் மேற்பட்ட கடல் விலங்குகளைக் கொண்ட எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பூங்கா முழுவதும் ஒட்டுமொத்தமாக, 15 க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு சவாரிகள், 100 க்கும் மேற்பட்ட விலங்கு கண்காட்சிகள், 10 க்கும் மேற்பட்ட விலங்குகளுடனான நெருங்கிய சந்திப்புகள், 20 நேரடி நிகழ்ச்சிகள் என்று ஏராளமான அனுபவங்களும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!