அமீரக செய்திகள்

UAE: மழை வெள்ளத்தில் உங்கள் கார் சேதமடைந்ததா..? இந்த காரணங்களுக்காக இன்சூரன்ஸ் நிராகரிக்கப்படலாம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு நாட்களாக நீடித்த சீரற்ற வானிலை பல்வேறு பாதிப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான அமீரகக் குடியிருப்பாளர்கள் கனமழை தங்கள் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தியிருப்பதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கார் உரிமையாளர்கள் சேதமடைந்த தங்கள் வாகனங்களை பழுதுபார்க்க இன்சூரன்ஸில் கிளைம் செய்யலாம்  என்று திட்டமிடுவார்கள். ஆனால், காப்பீட்டுத் துறை நிர்வாகிகள் வாகன ஓட்டிகளின் மழை தொடர்பான சேதங்களுக்கான காப்பீட்டு கோரிக்கைகள் பல காரணங்களால் நிராகரிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.

அதாவது, கனமழையில் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டு கோரிக்கைகளை தாக்கல் செய்ய வாகன உரிமையாளர்களுக்கு உரிமை உண்டு என்றாலும், அவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் கூற்றுப்படி, ஒரு வாகனமானது கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு, கனமழைக்குப் பிறகு அது வெள்ளத்தில் மூழ்கி, வாகன உரிமையாளர் அதை பராமரிப்புக்காக கேரேஜுக்கு இழுத்துச் சென்றால், பராமரிப்பு செலவானது காப்பீட்டின் மூலம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதுவே, உரிமையாளர் காரை தண்ணீர் தேங்கும் இடத்தில் அல்லது பகுதியளவு நீரில் மூழ்கிய இடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் வாகனத்தை இயக்க முற்படும்போது இன்ஜின் சேதமடைந்திருந்தாலும் கூட, காப்பீட்டு நிறுவனம் அவர்களின் கோரிக்கையை நிராகரிக்கலாம் என்றும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

மேலும், மழையில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் வாகன ஓட்டிகள் வேண்டுமென்றே வாகனம் ஓட்டினால், அந்த காரணத்திற்காகவும் காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரிக்கலாம் என்றும், ஆகவே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறும் வாகன ஓட்டிகளை அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, வெள்ளம் மற்றும் இயற்கைப் பேரிடர்களுக்கும் காப்பீடு பெறுவதை உறுதி செய்வதற்காக, குடியிருப்பாளர்கள் கார் காப்பீட்டை வாங்கும் போது குறிப்பிடப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஏனெனில், சில சமயங்களில் காப்பீட்டாளர்கள் இந்த உட்பிரிவுகளை மேற்கோள்காட்டி, கோரிக்கையை நிராகரித்து விடுவார்கள் என்றும் காப்பீட்டுத் துறை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!