அமீரக சட்டங்கள்

துபாய்க்கு விசிட் விசாவில் வர புதிய கெடுபிடி.. 3,000 திர்ஹம்ஸ் பணம், தங்குமிட சான்று கட்டாயம்.. விதிகளை கடுமையாக்கும் அதிகாரிகள்..

உலகளவில் பெரும்பாலான மக்கள் சுற்றிப்பார்க்க விரும்பும் முக்கிய சுற்றுலாத்தலமாக துபாய் திகழ்ந்து வருகிறது. மேலும் சமீப காலங்களில் துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அபரிமிதமான அளவில் அதிகரித்துக் காணப்படுகிறது. துபாயில் மக்களை கவர்ந்திழுப்பதற்கான பல்வேறு பொழுதுபோக்கு தலங்கள் இருப்பதும் நவீன தொழில்நுட்பங்கள், உயரமான கட்டிடங்கள், எளிதான போது போக்குவரத்து வசதி போன்றவையும் தொடர்ந்து பலரை துபாயை நோக்கி ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது விசிட் விசாவில் துபாய் வரும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விசிட் விசாவில் பயணிக்கவிருக்கும் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னதாக 3,000 திர்ஹம் ரொக்கம் (அல்லது அதற்கு நிகரான இந்திய மதிப்பில் ரொக்கம்), செல்லுபடியாகும் ரிட்டர்ன் டிக்கெட் மற்றும் தங்குமிடத்திற்கான சான்று ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்லுமாறு சுற்றுலா ஏஜென்சிகள் செய்தி ஊடகங்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளன.

அதாவது, மேற்கூறிய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய சில பயணிகள் இந்திய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் விமானங்களில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், விசிட் விசா வைத்திருந்த மற்ற பயணிகளும் துபாயில் உள்ள விமான நிலையங்களில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக டிராவல் ஏஜெண்ட் நிறுவனங்கள் கூறும் போது, துபாய்க்கு பயணம் செய்பவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுடன் செல்லுபடியாகும் விசாவை வைத்திருக்க வேண்டும், மேலும் விசிட் விசா பயணிகள் ரிட்டர்ன் டிக்கெட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இதற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனைகள் என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தற்போது வந்துள்ள தகவல்களின்படி, விசிட் விசாவில் வரும் பயணிகள் துபாயில் தங்கள் நாட்களை செலவிடுவதற்கு நிதி ஆதாரமாக போதுமான பணத்தை எடுத்துச் செல்கிறார்களா என்பதையும், அமீரகத்தில் அவர்கள் தங்குவதற்கு சரியான முகவரி ஆதாரம் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த சோதனைகள் செய்யப்படுவதாகவும் டிராவல் நிறுவன உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், இருப்பிடத்திற்கான ஆதாரம் உறவினர் அல்லது நண்பரின் வீடாகவோ அல்லது ஹோட்டல் முன்பதிவாகவோ இருக்கலாம் என்பதையும் பயண முகவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விதி நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது பயணிகளின் நலன் கருதி அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மற்றுமொரு பயண முகவர் கூறும் போது, விசா காலம் முடிவடைந்த பிறகும் நீண்ட காலம் சட்டவிரோதமாக தங்கியதாக பல வழக்குகள் உள்ளன என்றும், அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அமீரகத்தின் சுற்றுலாத் துறையை சாதகமாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், விமானத்தில் பயணிக்க முடியாமல் விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் வேதனையுடன் புலம்பி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து துபாயை வந்தடைந்த அபின் எனும் நபர், தன்னிடம் 3,000 திர்ஹம்ஸ்க்குச் சமமான தொகை இருப்பதற்கான ஆதாரத்தை காட்டும்படி அதிகாரிகள் கேட்டதாகவும், அவர் நிதி ஆதாரத்துடன் ரிட்டர்ன் டிக்கெட்டையும் அதிகாரிகளிடம் காட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிகாரிகள் அவரது தங்குமிடத்திற்கான ஆதாரத்தை வழங்குமாறும் அவரிடம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் துபாயில் தனது உறவினருடன் ஒரு அறையில் தங்கியிருப்பதாகவும், அவர் பெயரில் தங்குமிடம் இல்லை என்பதையும் அபின் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், அவரிடம் தங்குமிடத்திற்கான ஆதாரம் இல்லாததால், அதிகாரிகள் அவரை நான்கு நாட்கள் விமான நிலையத்தின் காத்திருப்பு கூடத்தில் தடுத்து வைத்ததாகவும், பின்னர் வேறுவழியின்றி சொந்த ஊருக்குத் திரும்பியதாகவும் அபின் வேதனை தெரிவித்துள்ளார்.

அபிஷேக் என்ற மற்றொரு இந்திய சுற்றுலாப் பயணி மே 20ஆம் தேதி துபாய் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற போது, அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவரை விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மற்றொரு பயணி கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் விசிட் விசாவின் காலத்திற்கு செல்லுபடியாகும் ஹோட்டல் தங்குமிடத்தையோ அல்லது திர்ஹாமாக 5000 திர்ஹம் பணத்தையோ காட்டாமல் யாரையும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காது என்று விமான நிலைய ஊழியர்கள் அவரது உறவினரிடம் கூறியதாகவும், அவரிடம் 50,000 இருந்த போதிலும், அவர் பணத்தை திர்ஹம்ஸில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக அவரது மாமாவின் எமிரேட்ஸ் ஐடி மற்றும் தங்கும் இடத்திற்கான ஆதாரம் உட்பட அனைத்து விவரங்களையும் அனுப்பியதாகவும், ஆனால் கொச்சி விமான நிலைய அதிகாரிகள் அவர் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை அவரை விமானத்தில் ஏற விட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், துபாயில் உள்ள ஸ்பைஸ் ஜெட் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் பணத்தைத் திரும்பக் கேட்ட போது, விதிகள் மிகக் கடுமையாக அமல்படுத்தப்படுவதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும், அதைச் சரிபார்ப்பது பயணிகளின் கடமை என்றும் அதிகாரிகள் கூறியதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இறுதியாக, திட்டமிடப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற முடியாமல், செலவழித்த பணத்தை இழந்ததுடன் இப்போது, ​​நிதி ஏற்பாடு செய்து, துபாய் செல்ல புதிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய காத்திருப்பதாகவும் அப்பயணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இது போன்று விசிட் விசாவில் பயணிப்பவர்கள் முறையான ஆவணங்களை தங்களுடன் வைத்திருந்து எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!