அமீரக செய்திகள்

துபாயில் விரைவில் திறக்கப்படவுள்ள 16 புதிய பேருந்து நிலையங்கள், 6 டிப்போக்கள்.. RTA அறிவிப்பு!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெகுவிரைவில் எமிரேட்டில் புதிதாக 16 பேருந்து நிலையங்கள், 6 டிப்போக்கள் திறக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது. மேலும், இவற்றை மேம்படுத்துவதற்காக மூன்று ஆண்டு திட்டத்தின் கீழ் பல ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து RTAவின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், இயக்குநர் ஜெனரலுமான மட்டர் அல் தயர் பேசுகையில், புதிதாக பொதுப் பேருந்து நிலையங்கள் மற்றும் டிப்போக்களை தொடங்குவது எமிரேட்டில் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான RTAவின் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பொது போக்குவரத்து சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், மக்கள் தங்கள் அன்றாட இயக்கங்களில் பொதுப் போக்குவரத்தைத் தேர்வுசெய்ய ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல் அவர்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்த திட்டம், பேருந்து நிலையங்களின் பாரம்பரிய செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், இது பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விரிவான சேவைகளை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகலை மேம்படுத்துதல், சைக்கிள் ரேக்குகளை வழங்குதல் மற்றும் துபாய் மெட்ரோ மற்றும் டாக்ஸி சேவைகளுடன் தடையற்ற இணைப்பை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம்:

RTAவின் இந்தத் திட்டத்தில் தேராவில் 9 நிலையங்கள் மற்றும் பர் துபாயில் ஏழு நிலையங்கள் உட்பட, பொதுப் பேருந்து பயணிகளுக்காக நியமிக்கப்பட்ட 16 நிலையங்களை மேம்படுத்துவதும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது. அவையாவன: மால் ஆஃப் எமிரேட்ஸ், சப்கா, ஜெபல் அலி, அல் குவோஸ், இபின் பதூதா, ஹத்தா, கோல்ட் சூக், அல் குசைஸ், தேரா சிட்டி சென்டர், அல் குபைபா, யூனியன், அல் சத்வா, அல் ரஷ்தியா, அபு ஹைல், எடிசலாட் மற்றும் அல் கராமா.

அதுமட்டுமில்லாமல், திட்டத்தின் ஒரு பகுதியாக, பயணிகள் பஸ் டெர்மினல்கள் புதுப்பிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் தொழுகை அறைகள் சேர்க்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, அல் கவானிஜ், அல் குசைஸ், அல் ருவ்யா, அல் அவீர், ஜெபல் அலி மற்றும் அல் கூஸ் ஆகிய இடங்களில் ஆறு பேருந்து நிலையங்களையும் இந்த திட்டம் மேம்படுத்தும் என்றும் இதில் ஆய்வுப் பாதைகளை மறுசீரமைத்தல், என்ஜின் கழுவும் பாதைகள், தரை பராமரிப்பு, புதிய அமைப்பு உள்கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் பொது வசதிகளை மறுசீரமைத்தல் போன்ற மேம்பாடுகள் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஜெபல் அலி மற்றும் அல் கூஸ் டிப்போக்களில் ஓட்டுநர் குடியிருப்பு வசதிகளை வழங்குவதுடன், போக்குவரத்து சிக்னல்கள் நிறுவப்பட்டு நடைபாதைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தும் தளங்கள் மறுவடிவமைப்பு செய்யப்படும் மற்றும் அல் கவானீஜ், அல் ருவ்யா மற்றும் அல் அவீர் டிப்போக்களில் ஆரம்ப சோதனை மண்டலம் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன நிலையங்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டில், அல் குபைபா, யூனியன், அல் ஜாஃபிலியா, ஓத் மேத்தா, அல் சத்வா, எடிசலாட், அல் பராஹா, இன்டர்நேஷனல் சிட்டி மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் (டெர்மினல் 3) உள்ளிட்ட துபாயின் முக்கிய பகுதிகளில் பல பொது பேருந்து நிலையங்கள் RTAஆல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த நிலையங்கள் அனைத்தும் நகர இணைப்பை மேம்படுத்த போக்குவரத்து தேவைகள் மற்றும் தரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெகுஜனப் போக்குவரத்து நிலையங்களுக்குச் செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் பாதுகாப்பான மற்றும் சுமூகமான அணுகலை எளிதாக்குவது, பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் இந்த வசதிகளை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என RTA முன்னர் தெரிவித்திருந்தது.

அத்துடன் இந்த மேம்பாடுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு அணுகக்கூடிய சூழலை உருவாக்குதல், பல்வேறு போக்குவரத்து முறைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை இணைத்தல் மற்றும் கூடுதல் பேருந்து சேவைகள் மூலம் சுற்றியுள்ள இடங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் கூறப்பட்டிருந்தது.

அதேசமயம், பொது பேருந்து நிறுத்தம், சைக்கிள் ஓட்டும் பாதைகள், பாதசாரிகள் கடக்கும் பாதைகள் மற்றும் பைக் ரேக்குகள் போன்ற அம்சங்களை வழங்குவதன் மூலம், RTA நடைபயிற்சி மற்றும் தனிப்பட்ட நபரின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முயல்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!