உலகில் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் ஜெனீவா மோட்டார் கண்காட்சி (Geneva International Motor Show) ரத்து
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்த வைரஸால் பாதிப்படைந்ததை ஒட்டி, ஜெனீவாவில் நடக்க இருந்த மோட்டார் கண்காட்சி (Geneva International Motor Show) ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல நாடுகளை பாதித்துள்ள கொரோனா வைரஸ் சுவிட்ஸர்லாந்து நாட்டையும் விட்டு வைக்கவில்லை. அதிகளவில் பரவி வரும் கொரோனா வைரஸின் அபாயத்தால் சுவிட்ஸர்லாந்தில் பெருமளவு மக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அங்கு 1000 மக்களுக்கு மேல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் எதுவும் அங்கு நடக்கக் கூடாது.
இதனை ஒட்டி ஜெனீவாவில் நடக்க இருந்த உலகின் வாகன தொழில்துறையில் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் சர்வதேச மோட்டார் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
“ஜெனீவா சர்வதேச மோட்டார் ஷோ நடைபெறாது” என்று ஜெனீவாவின் பிராந்திய கன்டோனல் அரசாங்கத்தின் தலைவர் அன்டோனியோ ஹோட்ஜர்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாது, அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர இருந்த உயர் அதிகாரிகள், கொரோனா வைரஸின் அபாயத்தால் தங்கள் வருகையை ரத்து செய்துள்ளனர். எனவே இந்த மோட்டார் கண்காட்சி நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதுமில்லை எனத்தெரிகின்றது.
இதுபோன்றே பயணத்தின் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அச்சங்கள் இருப்பதால் பார்சிலோனாவின் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (Mobile World Congress in Barcelona), பிராங்பேர்ட்டின் லைட் பில்டிங் ஃபேர் (Frankfurt’s Light + Building fair) மற்றும் பெய்ஜிங் ஆட்டோ ஷோ (Beijing Auto Show) போன்ற நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யப் போவதாகவோ தெரிகின்றது.