இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் உயிர்பலி…!!! மருத்துவ சோதனையில் உறுதி…!!!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று நோயானது படிப்படியாக உலகம் முழுவதும் தற்பொழுது பரவியுள்ளது. இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸினால் தற்பொழுது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்த 76 வயது முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் சமீபத்தில்தான் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்ததாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், நேற்று முன்தினம் உயிரிழந்ததும் அவர் கொரோனா பாதிப்பினால்தான் உயிரிழந்தாரா என்ற கேள்வி எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக, உயிரிழந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதார ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவிற்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இதுவரை 70 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக கேரளாவில் உள்ள பத்மநாதபுரம் அரண்மனை தற்பொழுது மூடப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்தியா அனைத்து நாட்டு மக்களுக்கும் சுற்றுலா விசாவை தடை செய்துள்ளது. இந்தியர்கள் அனைவரையும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது மற்றும் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.