அதிதீவிரமாகப் பரவும் கொரோனா : மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஐ கடந்தது!!!
கொரோனா வைரஸ் உலகின் மற்ற இடங்களை போலவே மத்திய கிழக்கு நாடுகளிலும் தனது தாக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வளைகுடா நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் மிக அதிதீவிரமாக பரவி வருகிறது. உலகளவில், 86,000 பேருக்கும் மேல் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் இது வரையிலும் 1,100 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த நோய்க்கு COVID-19 என்று பெயரிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இறுதியில் அதன் ஆரம்பம் மற்றும் அதை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் ஆகியவற்றைக் குறிக்கிறது.
இந்த வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஈரானில் மிக வேகமாகப் பரவி வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி, ஈரானில் ஒன்பது புதிய இறப்புகள் மற்றும் 205 புதிய நோய்தொற்று வழக்குகள் இந்த வைரஸால் பதிவாகியுள்ளன. இதன்படி, ஈரானில் இதுவரை வைரஸால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54 பேராகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 978 பேராகவும் உயர்ந்துள்ளது.
பெரும்பாலான நிபுணர்கள் ஈரானில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சுகின்றனர்.
வளைகுடா நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பல வழிகளில் வைரசைக் கட்டுப்படுத்த உண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
நடவடிக்கைகள்
இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தேவையான தம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் GCC நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈரானுடனான தொடர்புகளைத் துண்டிக்க பல நடவடிக்கைகளை வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன. வளைகுடா மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்தும் ஈரானில் இருந்து பரவியதாகவே காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தின் மத்தியில் வளைகுடா நாடுகளில் இருந்து குடிமக்கள், மக்கா மற்றும் மதீனாவுக்குள் நுழைவதை சவுதி அரேபியா தடைசெய்தது. குவைத் ஞாயிற்றுக்கிழமை மற்றொரு வழக்கைப் பதிவுசெய்தது, அதே நேரத்தில் நோய் பரவுமோ என்ற அச்சத்தில் கைதிகளுக்குண்டான வருகையை தடைசெய்தது.
குவைத்தில் கொரோனா வைரசால் இது வரை 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஹ்ரைனில் 38 பேரும், ஓமானில் 6 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 21 பேரும் பாதிப்படைந்து உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக அமீரகம் நர்சரி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. மேலும் மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனடிப்படையில் அமீரகத்தில் உள்ள பள்ளிகள் கல்விச்சுற்றுலா செல்வதோ, பல மாணவர்கள் ஒன்றாக வெளியில் கூடும் செயல்பாட்டிலோ ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
வர்த்தக நிலவரம்
கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த அச்சத்தில் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் வளைகுடாவில், பங்குச் சந்தைகள் சரிவை அடைந்தன. இது கடந்த வாரம் உலகளாவிய வர்த்தக நிறுவனங்களையும் தாக்கியது.
எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 50 டாலருக்கும் குறைந்துவிட்டதால் GCC-யில் உள்ள பங்குகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
பிராந்தியத்தின் மிகப்பெரிய மற்றும் உலகின் முதல் 10 பங்குச் சந்தைகளில் ஒன்றான சவுதியின் பங்குகள் தொடக்க மணி நேரத்தில் 3.1 சதவீதம் சரிந்தது. அதேபோல், குவைத் பங்குச்சந்தையின் அனைத்து பங்கு குறியீடும் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. குவைத்தின் பங்குச்சந்தை, கடந்த வாரத்தின் பெரும்பாலான நாட்கள் தேசிய விடுமுறைக்காக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
துபாய் நிதிச் சந்தை 4.3 சதவீதமும், அபுதாபி பங்குச்சந்தை திறந்த ஒரு மணி நேரத்தில் 3.8 சதவீதமும் சரிந்தது. கத்தார் பங்குச் சந்தை 0.6 சதவீதமும், பஹ்ரைனின் பங்குசந்தை 2.1 சதவீதமும், ஓமானில் மஸ்கட் செக்யூரிட்டீஸ் சந்தை 0.6 சதவீதமும் சரிவை சந்தித்தன.