இந்தியா : உள்நாடு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து தடை மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு..!!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த ஆரம்ப கட்டத்திலேயே அதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இன்றுடன் 21 நாட்கள் முடிவடையவிருந்த வேளையில், இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கும் மே மாதம் 3ம் தேதி வரையிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட மாட்டாது என்று அரசின் சார்பாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஏப்ரல் 14, 2020 செவ்வாய்க்கிழமை (இன்று) இந்திய சிவில் விமானப்போக்குவரத்து ஆணையத்தின் (Civil Aviation) சார்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 26, 2020 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, ஊரடங்கு உத்தரவு முடியும் வரை அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த கட்டுப்பாடு அனைத்து சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட விமானங்களுக்கு பொருந்தாது என்றும் துணை இயக்குநர் ஜெனரல் சுனில் குமார் கையெழுத்திட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகள் மற்றும் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்திற்கு விண்ணப்பித்திருக்கும் வேளையில், தற்பொழுது இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
— DGCA (@DGCAIndia) April 14, 2020