வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தற்போது நாடு திரும்ப வாய்ப்பில்லை..!!! மத்திய அரசு திட்டவட்டம்..!!!
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவின் பாதிப்பையொட்டி பல்வேறு நாடுகள் பலவிதமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்தியாவிலும், அதே போல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மே மாதம் 3ம் தேதி வரையிலும் விமானங்கள் இயக்கப்படாது என்று இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
ஆனாலும், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டிற்கு மீட்டு வருமாறு பல வழக்குகள் தொடர்ந்து நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா தாக்கத்தின் காரணமாக உலகளவில், பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளதால் உலகம் முழுவதும் பல இலட்சம் பேர் வேலையிழப்பை சந்தித்தும், போதிய வருமானம் இன்றியும் அன்றாடம் சமாளித்து வருகின்றனர். அதில் பல இந்தியர்களும் வளைகுடா நாடுகள், மலேசியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் வேலையின்றியும் கையில் செலவுக்கான பணம் இல்லாமலும் தவித்து வருகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
வளைகுடா நாடுகளிலும் கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்புகளையொட்டி, பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வேலைகளை இழந்தும், வேலை தேடி இந்த நாடுகளுக்கு வந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களும் செய்வதறியாது திணறி வருகின்றனர். அவர்கள் அனைவரின் எண்ணங்களிலும் விரைவில் தாய்நாட்டிற்கு சென்று தங்கள் குடும்பத்துடன் ஒன்றி வாழ்வதே இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களின் தற்போதைய குறிக்கோளாக இருக்கிறது. வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து இந்தியர்களும் தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்ல இந்திய அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், மலேசியாவில் சிக்கியுள்ள 350 க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வர போடப்பட்ட ஒரு வழக்கு விசாரணையின் போது, மத்திய வெளியுறவுத்துறை சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உலகெங்கிலும் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனுமதித்தால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு அது மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த காரணத்தினால் தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை தாயகத்திற்கு கூட்டி வருவது சாதியமற்ற ஒன்று என குறிப்பிட்டுள்ளது. இதனால் அந்த வழக்கு விசாரணை மேலும் இரு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்பி காத்துக்கொண்டிருக்கின்ற பல இந்தியர்களுக்கு மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.