இந்தியாவில் பீட்ஸா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா..!!! தனிமைப்படுத்தப்பட்ட 72 வீடுகள்…!!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிவேகமாகப் பரவி வரும் இந்நிலையில், பீட்சா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் டெலிவரி செய்த அனைத்து வீடுகளும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து இந்தியாவின் தலைநகரம் டெல்லியின் தென்பகுதி மாவட்ட மாஜிஸ்திரேட் BM மிஸ்ரா கூறுகையில், “டெல்லியில் பீட்சா டெலிவரி செய்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு கடந்த ஒரு மாதமாக சளி மற்றும் இருமல் தொந்தரவு இருந்துள்ளது. சில மருத்துவமனைகள் அதனை பொதுவான காய்சலுக்குண்டான அறிகுறிகள் என்று நிராகரித்துள்ளன. தொடர்ந்து அவருக்கு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். சோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று கூறியுள்ளார்.
மேலும் இவர் கூறுகையில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் பணிபுரிந்த 16 பேரும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவர் பிட்சா டெலிவரி செய்த 72 குடும்பங்களும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தற்பொழுது 1500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் மற்றும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்திய அளவில் 12,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.