கத்தார்: அரசு, தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் பணிபுரிய அனுமதி..!! 50 சதவீதத்தினர் அலுவலகத்திலும் மற்றவர்கள் வீட்டிலும் பணிபுரிய ஒப்புதல்..!!
கொரோனாவின் தாக்கத்தால் கத்தார் நாட்டில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 50 சதவீத அளவிலான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணிபுரியலாம் என, கத்தார் நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சருமான மாண்புமிகு ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஸீஸ் அல் தானி அவர்களின் தலைமையில் இன்று பிற்பகல் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் நாட்டில் அமல்படுத்தபட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் புதிய அமைச்சரவை முடிவின்படி, தனியார் சுகாதார மையங்களில் 60 சதவீத திறனுடன் ஊழியர்கள் பணியாற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 – அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற வேண்டும்.
2 – தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற வேண்டும்.
3 – மருத்துவ சேவைகளை வழங்கும் சுகாதார மையங்களில் அவசரகால சேவைகளை தொடர்ந்து வழங்கும் பொருட்டு, சுகாதார மையங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையில் 60 சதவீத திறனை கொண்டு இயங்கலாம்.
4 – இதற்கு முன்னதாக கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நடவடிக்கைகள் மீண்டும் தொடரும்.
5 – சுகாதாரத் தேவைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொது சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
ஜூலை 1, 2020 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்த முடிவானது மறு அறிவிப்பு வரும் வரையிலும் தொடரும் என அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.