இந்தியா : சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூலை 15 வரை நீட்டிப்பு..!! விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல்..!!
இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையானது வரும் ஜூலை மாதம் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் பாதிப்பினால் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு புறப்படும் மற்றும் மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களின் சேவைகளானது கடந்த மூன்று மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளானது ஜூலை மாதத்தில் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையொட்டி, இந்தியர்கள் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்பொழுது ஜூலை 15 ம் தேதி வரை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சரக்கு விமானங்களுக்கும் சிறப்பு விமானங்களுக்கும் தடையில்லை என்றும் அவை தொடர்ந்து இயங்கி வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.