ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் பணி மாற்றம் செய்ய NOC தேவையில்லை..!! புதிய அறிவிப்பு வெளியீடு..!!
ஓமான் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு தங்கள் வேலையை மாற்றிக்கொள்வதற்கு NOC (No Objection Certificate) எனும் முறை தற்பொழுது வரையிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த வருடம் 2021, ஜனவரி 1 ம் தேதி முதல் NOC (No Objection Certificate) எனும் முறை நீக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓமானில் பணிபுரியும் ஒருவர் ஒரு நிறுவனத்தை விட்டு வேறொரு நிறுவனத்தில் பணிபுரிவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓமான் காவல்துறை மற்றும் சுங்கத்துறையின் இன்ஸ்பெக்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹசன் பின் முஹ்சின் அல்-ஷுரைகி (Lt Gen Hassan bin Muhsin Al-Shuraiqi ,Inspector. General of Police and Customs) அவர்களின் ஆணைக்கிணங்க, வெளிநாட்டினர் குடியிருப்பு சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறையின் 24 வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தும் செய்யப்பட்ட புதிய ஆணையின் படி, ஒரு பணியாளர் தங்கள் முந்தைய நிறுவனத்தின் ஒப்பந்த காலத்தை நிறைவுசெய்தால், ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு NOC கடிதம் இல்லாமல் எளிதாக சென்று வேலை பார்க்க முடியும். எனினும் அவர்கள் (ஊழியர்கள்) வேறொரு நிறுவனத்தில் சேருவதற்கு தங்கள் முந்தைய நிறுவனத்தின் பணி ஒப்பந்தத்தை (contract) முடித்துவிட்டார்கள் என்பதை கட்டாயம் நிரூபிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NOC என்றால் என்ன?
ஓமானில் பணிபுரியும் வெளிநாடுகளை சேர்ந்த ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தை விட்டு வேறு ஒரு நிறுவனத்தில் புதிய வேலைக்காக மாற விரும்பினால், அந்த ஊழியர் தான் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து வேலை மாறுதலுக்கான அனுமதி கடிதம் (NOC) பெற வேண்டும்.
பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து NOC ஐ பெறவில்லையென்றால், அந்த ஊழியருக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இது வரையிலும் ஓமான் நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.
- தான் பணிபுரியும் நிறுவனத்திலேயே தன் பணியை தொடர வேண்டும்.
- இல்லையெனில், அந்த ஊழியர் ஓமான் நாட்டினை விட்டு வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறியவர்கள் ஓமான் நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.