UAE : இந்த ஆண்டு இறுதி வரை விசா நீட்டிப்பு பெற்றவர்கள் தாயகம் செல்ல முடியுமா..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளார்களில் ரெசிடென்ஸ் விசா காலாவதியானவர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரையிலும் அவர்களின் விசாவினை நீட்டித்து அமீரக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, மார்ச் 1 ம் தேதிக்கு பின்னர் காலாவதியான விசாக்கள் மற்றும் வரக்கூடிய மாதங்களில் காலாவதியாகக் கூடிய அனைத்து விசாக்களும் டிசம்பர் 31, 2020 வரையிலும் தானாகவே நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த ஆண்டு இறுதி வரையிலும் விசா நீட்டிப்பு பெற்றவர்கள் இதே விசாக்களை கொண்டு ஏதேனும் அவசர தேவைக்கோ அல்லது ஆண்டு விடுமுறைக்கோ தாயகம் செல்ல முடியுமா என்று அமீரக குடியிருப்பாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்த அமீரகத்தின் GDRFA அமர் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டரின் இயக்குனர் மேஜர் சலீம் பின் அலி, “இந்த ஆண்டு இறுதி வரையிலும் விசா நீட்டிக்கப்பட்டவர்கள், தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவதில் எந்த சிக்கலும் இல்லை. எனினும் பாஸ்போர்ட்டில் இருக்கக்கூடிய ரெசிடென்ஸ் விசா ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டுள்ள வேலிடிட்டி தேதி காலாவதியாகி இருப்பின், அமீரகம் திரும்பி வருவதில் அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பாஸ்போர்ட்டில் இருக்கக்கூடிய விசா காலாவதியான நிலையில், அவர்கள் புறப்படும் நாட்டிலிருந்து அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ள அவர்களை அந்நாட்டு அதிகாரிகள் அனுமதிக்க வாய்ப்பில்லை” என கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், அவசர தேவைக்காகவோ அல்லது ஆண்டு விடுமுறைக்காகவோ அல்லது வேலை நிமிர்த்தமாக வேறு நாடுகளுக்கோ செல்ல விரும்பும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் விசாவினை முறையாக புதுப்பித்துவிட்டு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். விசாவினை புதுப்பிக்காமல் செல்பவர்கள் அமீரகம் திரும்ப அனுமதிக்கப்படாத பட்சத்தில், நுழைவு அனுமதி (Entry Permit) பெற்றே அமீரகம் திரும்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் இருக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் விசாவின் நிலையை மாற்றிக்கொள்வதற்கும், காலாவதியான விசாவினை புதுப்பித்து கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.