அமீரக சட்டங்கள்

தனியார் துறை தொழிலாளர்களும் இறுதி சேவை பலன்களை முதலீடு செய்ய அமீரக அமைச்சரவை ஒப்புதல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளிகளுக்கு முதலாளிகளுடனான பணி உறவு முடிவடையும் போது, ​​சேவையின் இறுதிப் பலன்கள் மற்றும் வருமானம் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டத்தில், தனியார் துறை மற்றும் இலவச மண்டலங்களில் (free zone) பணிபுரியும் ஊழியர்களுக்கான புதிய இறுதிச் சேவைப் பலன்கள் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 4 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தொழிலாளர்களின் சேமிப்பைப் பாதுகாப்பதும் மற்றும் அவர்கள் பாதுகாப்பாக முதலீடு செய்யப்படுவதை உறுதிசெய்வதும் இந்த புதிய அமைப்பின் குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

மேலும், இது ஊழியர்களின் உரிமைகளை உறுதி செய்வதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு நிலைத் தன்மையை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே, தனியார் துறை மட்டுமின்றி, அரசு ஊழியர்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

அமீரகத்தில் உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு கிராஜுட்டி (gratuity) கிடைக்கும். அத்துடன், ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியான சேவையில் இருப்பவர்கள் இந்த சேவையின் இறுதிப் பலனைப் பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய அமைப்பு எப்படி செயல்படுகிறது?

முதலாளிகள் தங்கள் ஊழியர்களின் தொழில்முறை நிலைகளைப் பொருட்படுத்தாமல், புதிய இறுதிச் சேவைப் பலன்கள் அமைப்பில் பதிவுசெய்து, மாதாந்திர பங்களிப்பைச் செலுத்தலாம். இது பின்வரும் மூன்று முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது:

  1. அபாயங்கள் இல்லாத மூலதன உத்தரவாதம் (Risk-free capital guarantee)
  2. அபாயங்கள் குறைந்த, நடுத்தர மற்றும் உயர்ந்த அளவில் முதலீடுகள் மாறுபடும்.
  3. ஷரியா-இணக்க முதலீடுகள் (Sharia-compliant investments).

இத்திட்டத்தில் முதலாளிகளுடனான அவர்களின் பணி உறவு முடிவடையும் போது, ​​சேவையின் இறுதிப் பலன்கள் மற்றும் வருமானம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2022 ஆம் ஆண்டில், அரசாங்கத் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான இறுதிச் சேவை சேமிப்புத் திட்டத்தை துபாய் அறிவித்திருந்தது. இது அவர்களின் நன்மைகள் மற்றும் சேமிப்பை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!