வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவோர் கொரோனாவிற்கான நெகடிவ் செர்டிபிகேட் வைத்திருத்தல் கட்டாயம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

கொரோனாவின் பாதிப்பால் இந்தியாவிற்கு பயணிக்க முடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்தோர் கடந்த சில மாதங்களாக இந்திய அரசு மேற்கொள்ளும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தாயகம் திரும்புகின்றனர். மேலும், இந்திய அரசானது குறிப்பிட்ட சில நாடுகளுடன் போடப்பட்ட “Air Bubble” என்ற ஒப்பந்தப்படி, சிறப்பு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களால் தாயகம் திரும்பும் பயணிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல்வேறு பயண வழிமுறைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், சில வழிமுறைகள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு திருத்தம் செய்யப்பட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவோர் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் தற்பொழுது வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகம் செல்லும் அனைத்து பயணிகளும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விமான நிலையத்தை அடைவதற்கு முன்னர் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாவிற்கான RT-PCR சோதனை மேற்கொண்டு அதில் எதிர்மறை பெற்ற சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, தமிழகம் செல்லும் பயணிகள் அனைவரும் www.https://tnepass.tnega.org/ என்ற வலைதளத்தில் சென்று TN e-PASS பெற்றிருக்க வேண்டும் என்றும் விமான நிறுவனம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தை அடையும் கொரோனா நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்கும் பயணிகளுக்கு கட்டண தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கலாம் என்றும் சென்னை விமான நிலையத்தின் சார்பாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.