அமீரக செய்திகள்

UAE: அல் காதிசியா பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், பேச்சுலர்கள் உடனடியாக காலி செய்ய ஷார்ஜா ஆட்சியாளர் உத்தரவு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருக்கக்கூடிய அல் காதிசியா (Al Qadisiya) மாவட்டத்தில் வசித்துவந்த தொழிலாளர்கள் (Labourers) மற்றும் பேச்சுலர்கள் (Bachelors) உடனடியாக அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அல் காதிசியா பகுதியில் வசித்துவரும் அமீரக குடும்ப பெண்மணி ஒருவரின் புகாரை தொடர்ந்து இந்த உத்தரவை ஷார்ஜாவின் ஆட்சியாளர் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக நெரிசலான மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் அதிக எண்ணிக்கையிலான பேச்சுலர் மற்றும் தொழிலாளர்களால் பாதுகாப்பற்றதாக உணர்வதாக அமீரக பெண் அளித்த புகாரை தொடர்ந்து, அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்த முடிவு செய்யப்பட்டு ஷார்ஜா நகராட்சி மற்றும் ஷார்ஜா காவல்துறையின் ஒத்துழைப்புடன் இந்த முடிவு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் (செப்டம்பர் 27) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்கள் (பேச்சுலர்கள்) அதிகமாக தனது வீட்டின் அருகே கூட்டமாக இருப்பதாகவும், அதிக கூச்சலுடன் ஒழுங்கற்று நடந்து கொள்வதாகவும், இதனால் தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் அந்த பெண் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் குடும்பங்கள் வசிக்கக்கூடிய பகுதியில் விதியை மீறி தங்கியிருந்த அனைத்து தொழிலாளர்கள் மற்றும் விதிமீறலில் ஈடுபட்டவர்களை அப்பகுதியை விட்டு முற்றிலுமாக காலி செய்யுமாறு ஷார்ஜாவின் ஆட்சியாளர் உடனடியாக ஷார்ஜா நகராட்சி மற்றும் ஷார்ஜா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஷார்ஜா நகராட்சியின் இயக்குநர் ஜெனரல் தபிட் அல் துரைஃபி கூறுகையில், ஷார்ஜா ஆட்சியாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும் ஷார்ஜா நகராட்சியினர் இப்பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள இருப்பிடங்களில் விதிமுறைகளை மீறி தொழிலாளர்களுக்கும் மற்றும் பேச்சுலர்களுக்கும் வீடுகள் குத்தகை விட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ஷார்ஜா காவல்துறைத் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் சிரி அல் ஷம்ஸி அவர்கள் தெரிவிக்கையில், தொழிலாளர்கள் மற்றும் விதிமீறலில் ஈடுபட்டவர்களை குடியிருப்பு பகுதியை விட்டு அகற்ற ஷார்ஜா நகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு ஷார்ஜா ஆட்சியாளரிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த நடவடிக்கையில் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் (special task forces), CID பணியாளர்கள் மற்றும் ஷார்ஜா சிவில் பாதுகாப்பு (Sharjah Civil Defence) ஆகியவையும், ஆட்சியாளரின் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் ஷார்ஜா நகராட்சியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் மேஜர் ஜெனரல் அல் ஷம்ஸி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!