சென்னை வரும் சர்வதேச பயணிகளின் “தனிமைப்படுத்தல்” குறித்து தமிழக அரசின் புதிய அறிவிப்பு..!! பயணிகள் மகிழ்ச்சி..!!

வெளிநாடுகளிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரும் பயணிகளுக்கும், அதே போன்று வெளிமாநிலங்களிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரும் பயணிகளுக்கும் கட்டண தன்மைப்படுத்தலிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாக தமிழகத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (Tamilnadu Health and Family Welfare Department) மற்றும் சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின் மூலம் வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்தடையும் சர்வதேச விமான பயணிகள் அனைவரும் இன்று முதல் 14 நாட்களும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது. மேலும் கூறுகையில், விமான நிலையம் வந்தடையும் பயணிகள் 96 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பயணிகளில் எவருக்கேனும் கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோதனை முடிவின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கொரோனா சோதனையின் முடிவில் நேர்மறையான முடிவினை (Positive) பெறும் பயணி, கொரோனா தொற்றிற்கான அறிகுறிகளையும் (Symptomatic) கொண்டிருந்தால், அவர் விமான நிலையத்திலிருந்து நேராக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்.
  • கொரோனா சோதனையின் முடிவில் நேர்மறையான முடிவினை (Positive) பெறும் பயணி, கொரோனா தொற்றிற்கான அறிகுறிகளற்று (Asymptomatic) காணப்பட்டால், அவர் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கண்காணிக்கப்படுவார்.
  • கொரோனா சோதனையின் முடிவில், எதிர்மறையான முடிவினை(Negative) பெறும் பயணி, கொரோனா தொற்றிற்கான அறிகுறிகளற்று (Asymptomatic)  காணப்பட்டால் அவர் 14 நாட்களும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.

கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்திய நாட்டவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக தொடங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியா திரும்பும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

பின்னர் இந்தியாவில் கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதியிலிருந்து கொரோனா நெகடிவ் சான்றிதழுடன் வரும் பயணிகளுக்கு கட்டண தனிமைப்படுத்தலில் விலக்கு அளிக்கப்படும் எனவும், இந்த சலுகையை பெற ஏர் சுவிதா (Air Suvidha) என்ற போரட்டலில் கொரோனா சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் இந்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.