Uncategorized

UAE: மருத்துவமனை துப்புரவாளர்கள் உட்பட சுகாதார ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அறிவித்த அமீரக அரசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிராக முன்னின்று போராடிய முன்னணி சுகாதார வீரர்களை ஆதரிப்பதற்காக தொடங்கப்பட்ட “ஹய்யாகும் (Hayyakum)” எனும் புதிய முயற்சியின் மூலம் முன்னணி சுகாதார நிபுணர்களின் குழந்தைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் பொதுப் பள்ளிகளில் சேர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அமீரகத்தின் கல்வி அமைச்சகம் (MoE) மற்றும் முன்னணி ஹீரோஸ் அலுவலகம் (Frontline Heroes Office) ஆகிய இரண்டும் இனைந்து ஹய்யாகும் எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. முன்னணி சுகாதார நிபுணர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகவும், அதே நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் அழுத்தத்தை தணிக்கவும் நோக்கமாக கொண்டு இந்த புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

அமீரக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கல்வி உதவித்தொகை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதல் மருத்துவமனை துப்புரவாளர்கள் வரை அனைத்து முன்னணி சுகாதார ஊழியர்களையும் உள்ளடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த கல்வி உதவித்தொகை அமீரகத்தின் பொதுப் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரையிலும், அமீரகத்தில் பணிபுரியும் சுகாதார முன்னணி வீரர்களின் 1,850 குழந்தைகள் நடப்பு கல்வியாண்டிற்கான உதவித்தொகைகளைப் பெற்றுள்ளனர் என்றும் மேலும் இது அவர்களின் பள்ளிப்படிப்பு ஆண்டு இறுதி வரையிலும் நீட்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அமீரக அரசு அறிவித்துள்ள இந்த கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்க விரும்பும் மற்ற சுகாதார ஊழியர்கள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னர் தங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

ஹய்யாகும் (Hayyakum) என்பது அமீரகத்தின் கல்வி அமைச்சகம் (MoE) மற்றும் முன்னணி ஹீரோஸ் அலுவலகம் (Frontline Heroes Office) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பரந்த ஒத்துழைப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், இது கொரோனாவிற்கு எதிராக முன்னின்று போராடிய சுகாதாரத் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்கும் மற்றும் கல்வியை மையமாகக் கொண்ட பிற முயற்சிகளைத் தொடங்கவும் செயல்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முயற்சியின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறும் வரையிலான கல்வி கட்டணம், மடிக்கணினிகள் மற்றும் போக்குவரத்து செலவுகளை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. .

இது குறித்து முன்னணி ஹீரோஸ் அலுவலகத்தின் (Frontline Heroes Office) குழுவின் தலைவரான ஷேக் சுல்தான் பின் தஹ்னூன் அல் நஹ்யான் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் தங்களது சொந்த தேவைகளை விட முன்னிலையில் வைத்திருக்கும் சுகாதார ஊழியர்களுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

“எங்கள் முன்னணி வல்லுநர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் உண்மையான ஹீரோக்கள், எங்கள் இதயங்களின் அடிப்பகுதியில் இருந்து அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். அவர்களின் தன்னலமற்ற சேவை கடினமான இந்த நேரத்திலிருந்து மீண்டு வர நமக்கு பெரிதும் உதவியது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!