வெளிநாடுவாழ் இந்தியர்கள் “சர்வதேச ஓட்டுநர் அனுமதியை” தூதரகங்கள் மூலமே புதுப்பிக்கலாம்..!! அமலுக்கு வரும் புதிய விதி..!!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி வைத்திருப்பவர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் பட்சத்தில் அதனை தாங்கள் வசிக்கக்கூடிய வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் மற்றும் கன்சுலேட் வாயிலாகவே புதிப்பித்துக்கொள்ளும் வசதி விரைவில் அமலுக்கு வர இருப்பதாக இந்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது அமலில் இருக்கும் 1989 ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தத்தின் மூலம் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் வசிப்பவர்களில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் குறித்து இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு செய்திக்குறிப்பில் “ஏதேனும் ஒரு வெளிநாட்டில் வசித்துவரும் இந்திய குடிமக்களின் சர்வதேச ஓட்டுநர் அனுமதி காலாவதியாகிவிட்டால், வெளிநாட்டில் இருக்கும்போது அதை புதுப்பிப்பதற்கான எந்த வழிமுறையும் இல்லை தற்போது நடைமுறையில் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தத்தின் மூலம் “இந்திய குடிமக்கள் இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் இணையதளங்கள் மூலம் தங்களின் ஓட்டுநர் அனுமதியை விண்ணப்பிக்கலாம் எனவும், அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் “வஹான் (VAHAN)” எனும் சேவை வழங்கும் தளம் வாயிலாக அந்தந்த RTO க்களுக்கு அனுப்பப்பட்டு அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

வஹான் என்பது வாகன பதிவு, அனுமதி வழங்கல் மற்றும் வரி செலுத்துதல் போன்ற சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வரும் சேவைகளுக்கான இந்திய அரசின் ஒருங்கிணைந்த அமைப்பாகும். திருத்தம் செய்ய முன்மொழியப்பட்டுள்ள வாகன விதி குறித்து பொதுமக்களின் கருத்துக்காக 30 நாட்கள் கால அவகாசம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த புதிய விதி அமலுக்கு வரும் என அறியப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் சர்வதேச ஓட்டுநர் அனுமதியை புதுப்பிக்க தேவையான மருத்துவ சான்றிதழ் மற்றும் செல்லுபடியாகும் விசா ஆகியவற்றை நீக்குவதும், மோட்டார் வாகன விதிகளில் மேற்கொள்ளப்படவிருக்கும் நிறுத்தங்களில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.