அமீரக செய்திகள்

துபாயில் இம்மாதம் திறக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய புதிய “வாட்டர் ஃபவுண்டைன்”..!! பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்..!!

உலகிலேயே மிகப்பெரிய வாட்டர் ஃபவுண்டைன் (Water Fountain) அமைந்துள்ள துபாயில் தற்போது அதனையும் மிஞ்சும் வகையில் மற்றுமொரு மிகப்பெரிய “பாம் ஃபவுண்டைன் (Palm Fountain)” எனும் புதிய வாட்டர் ஃபவுண்டைன் வரும் அக்டோபர் 22 ஆம் தேதி வியாழக்கிழமை துபாயில் திறக்கப்படவுள்ளது. அதிகாரபூர்வமாக இந்த புதிய வாட்டர் ஃபவுண்டைன் திறக்கப்பட்டவுடன், தற்போது கின்னஸ் உலக சாதனையை படைத்திருக்கும் துபாய் மாலில் உள்ள “துபாய் ஃபவுண்டைனை (Dubai Fountain)” பின்னுக்கு தள்ளி இதுவே உலகின் மிகப்பெரிய வாட்டர் ஃபவுண்டைன் என்ற கின்னஸ் உலக சாதனையை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாம் ஜுமீராவில் அமைந்துள்ள இந்த புதிய “பாம் ஃபவுண்டைன்” தொடக்க வெளியீட்டு நிகழ்வில் பொதுமக்களும் இலவசமாக கலந்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த தொடக்க நிகழ்வில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை பல நடன நிகழ்ச்சிகள், கலைஞர்களின் நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சி உள்ளிட்ட நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும், மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள உணவகங்களிலிருந்து நாள் முழுவதும் வேடிக்கை மற்றும் போட்டிகளை காணமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 22 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கும் வாட்டர் ஃபவுண்டைன் நிகழ்ச்சியை, பார்வையாளர்கள் அங்கிருக்கும் 30 வெவ்வேறு உணவகங்களிலிருந்தும் தொடக்க நிகழ்ச்சியின் காட்சிகளை ரசிக்கலாம் எனவும் நாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்வுகளை இலவசமாக காண பிளாட்டினம் லிஸ்ட் (Platinum List) என்ற வலைத்தளம் வழியாக பதிவு செய்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாவதாக வரும் முதல் 5,000 பார்வையாளர்கள் இலவச LED கைக்கடிகாரத்தைப் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் 14,000 சதுர அடியில் அமைந்திருக்கும் இந்த புதிய பாம் வாட்டர் ஃபவுண்டைனில் சிறப்பம்சமாக தினமும் கலீஜி, பாப், கிளாசிக், சர்வதேச மற்றும் பல பிரபலமான பாடல்களின் வரிசையில், 30 நிமிட இடைவெளியில் 20 நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்படும். இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறவிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மூன்று நிமிடங்களுக்கு நீடிக்கும். மேலும் இதில் 105 மீட்டர் உயரத்திற்கு கடல்நீரை எழுப்பும் கருவியும், 3,000 க்கும் மேற்பட்ட LED விளக்குகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் ஃபவுண்டைனின் இருபுறமும் இசையை எழுப்பும் உயர் செயல்திறன் கொண்ட ஆடியோ அமைப்புடன் கூடிய 86 ஸ்பீக்கர்கள் நிறுவப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!