அமீரக செய்திகள்

UAE: தொழிலாளர்களுக்கான உலகின் முதல் “மேட் இன் இந்தியா – ஏசி சேஃப்டி ஹெல்மெட்” துபாயில் அறிமுகம்..!!

உலகில் முதன் முதலாக திறந்த வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் ஏசி சேஃப்டி ஹெல்மெட் துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் NIA லிமிடெட் நிறுவனம் அமீரகத்தில் திறந்தவெளியில் பணிபுரியக்கூடிய வேலையாட்கள் மற்றும் கள நிர்வாகிகளுக்காக இந்த ஏசி ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளது. உலகில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஏசி ஹெல்மெட் இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஜார்ஷ் சேஃப்டியால் தயாரிக்கப்பட்டு ஜார்ஷ் சேஃப்டி-NIA கூட்டு முயற்சியில் அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்போ 2020 துபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா பெவிலியனில் நடந்த ஹைடெக் ஹெல்மெட்டின் வெளியீட்டு விழாவில் NIA லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவரான MTH நியா, NIA லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கம்ரான் பிர்ஜிஸ் கான் மற்றும் ஜார்ஷ் சேஃப்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவுஸ்துப் கவுண்டினியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் திட-நிலை குளிரூட்டும் தொழில்நுட்பத்தில் இயங்கும் காப்புரிமை பெற்ற இந்த ஏசி ஹெல்மெட் 24ºC வரை குளிர்ச்சியை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

“தொழிலாளர் நலத் தரங்களை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரக அரசின் முயற்சிகளுக்கு இணங்க, இந்தியாவின் விருது பெற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஜார்ஷ் சேஃப்டியில் இணைந்து இந்த ஏசி சேஃப்டி ஹெல்மெட்டை UAE மற்றும் பரந்த பிராந்தியத்திற்கு அறிமுகப்படுத்துவதில் NIA லிமிடெட் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது” என்று NIA லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கம்ரான் கூறியுள்ளார்.

மேலும் இந்த உலகின் முதல் ஏசி பாதுகாப்பு ஹெல்மெட்டானது தொழில்துறை, கட்டுமானம் மற்றும் பிற வெளிப்புற பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிக வெப்பநிலை சூழலில் பணிபுரிய வசதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கம்ரான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் என்ற முறையில், ஏசி பாதுகாப்பு ஹெல்மெட்டை இப்பகுதியில் கொண்டு வருவதும், தொழிலாளர்களின் வசதியை மேம்படுத்த இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் எங்கள் சமூகப் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜார்ஷ் சேஃப்டி-NIA கூட்டு முயற்சியில் அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஏசி ஹெல்மெட்டானது, மூத்த அதிகாரிகளுக்கான பிரீமியம் மாடலில் இரண்டு மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கும் எனவும், அதே நேரத்தில் திறமையான பணியாளர்களுக்கான ஹெவி-டூட்டி மாடலில் 10 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கும் என இதனை வடிவமைத்துள்ள ஜார்ஷ் சேஃப்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கவுஸ்துப் கவுண்டினியா கூறியுள்ளார்.

மேலும் இந்த ஹெல்மெட் முழுவதும் காற்று செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள நான்கு வென்ட்கள் ஒரு சீரான குளிரூட்டும் அனுபவத்தை வழங்கும் என்றும், இதனை பயன்படுத்தும் பயனர்களுக்கு வசதியாகவும், வியர்வை இல்லாததாகவும் மற்றும் வேலையில் பயனுள்ளதாகவும் வைத்திருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!