அமீரக செய்திகள்

UAE: பத்திரிகையாளர் ஜமால் கசோகியின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை.. அமீரக நீதிமன்றம் உத்தரவு..!

ஜமால் கசோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர். இவர், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றபோது மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்த கொலை சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே கசோகி படுகொலை செய்யப்பட்டதாக துருக்கி பகிரங்க குற்றம் சாட்டியது. ஆனால் சவுதி அரேபியா அரசு அதை திட்டவட்டமாக மறுக்கிறது.

இதற்கிடையில், கொல்லப்பட்ட ஜமால் கசோகியின் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தவர் ஆசிம் கஃபீர். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார். ஆசிம் கஃபீர் பணமோசடி மற்றும் வரி மோசடியில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்குத்தொடர்பாக கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பணமோசடி மற்றும் வரி மோசடியில் ஈடுபட்டதாக ஆசிம் கஃபீருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 8.16 லட்சம் அமெரிக்க டாலரும் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசிம் கஃபீர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!