அமீரக செய்திகள்

பார்வையாளர்கள் இல்லா IPL-2020: புது அனுபவத்திற்கு தயார் நிலையில் CSK மற்றும் MI அணிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடத்திற்கான IPL 2020 கிரிக்கெட் தொடரானது நடைபெறுவதை முன்னிட்டு IPL வீரர்கள் அனைவரும் ஏற்கெனவே அமீரகத்திற்கு வந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருட IPL போட்டிகளானது அமீரகத்தில் இருக்கக்கூடிய துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு போட்டிகளுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்த IPL 2020 தொடரின் முதல் போட்டியானது இன்று அபுதாபியில் இருக்கக்கூடிய ஷேக் சையத் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக IPL போட்டிகளானது பார்வையாளர்கள் இல்லாமலேயே நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, IPL அணி வீரர்கள் அனைவரும் இந்த வருட IPL -ல் ஒரு புது அனுபவத்தை பெறத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

உலகம் முழுவதிலும் நடைபெறும் மற்ற கிரிக்கெட் போட்டிகளை விட IPL போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் IPL போட்டிகளில் மைதானத்தில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு தங்களின் அணிகளுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். மேலும், ஒவ்வொரு விக்கெட், சிக்சர்களின் போதும் மைதானத்தில் ஏராளமான உற்சாகக்குரல்களும் கை தட்டல்களும் மற்றும் IPL போட்டிகளுக்கென்றே ஒலிபரப்பப்படும் பிரத்யேகமான இசையும் காண்போர் எல்லாரையும் கவர்ந்திழுக்கும். மேலும், இவை அனைத்தும் அணி வீரர்களுக்கு ஒரு பலத்த உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இந்த வருட போட்டிகளில் இந்த சிறப்பம்சங்கள் இல்லாமல் அணி வீரர்கள் விளையாட வேண்டியுள்ளது. இருப்பினும், இப்போட்டியை நேரலையாக பல்வேறு ஊடகங்களில் காண முடியும். குறிப்பாக, ரசிகர்களால் “தல” என்று செல்லமாக அழைக்கப்படும் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் கலந்து கொள்ளும் முதல் போட்டி என்பதால் தோனி ரசிகர்களிடையே குறிப்பாக தமிழக ரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற இருக்கும் முதல் IPL போட்டியானது அமீரக நேரப்படி மாலை 6 மணிக்கும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!