ஓமான்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நெறிமுறைகள் தோஃபர் கவர்னரேட்டில் அறிவிப்பு..!!

ஓமானின் தோஃபர் கவர்னரேட்டில் COVID-19 நோய்த்தொற்று பரவலைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை ஓமானின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) தற்பொழுது  செயல்படுத்தியுள்ளது.

அதிகரித்து வரும் COVID-19 பாதிப்புகளை அடுத்து சலாலாவில் உள்ள சுல்தான் கபூஸ் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆதரவாக சலாலாவில் உள்ள அல்-தஹரிஸ் ஹெல்த் சென்டர், நியூ சலாலா ஹெல்த் சென்டர் மற்றும் ஹாஜிப் ஹெல்த் சென்டர் ஆகிய மூன்று சுகாதார மையங்களை மூட DGHS தொற்றுநோயியல் தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது.

மேலும் தேவையற்ற அனைத்து அறுவை சிகிச்சைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைத்தல், சுகாதார ஊழியர்களுக்கு விடுப்பு அனுமதி வழங்குவதை நிறுத்துதல், சிறப்பு கிளினிக்குகளில் 30 சதவீதம் வரை பணிகளைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக, மருத்துவ உடற்தகுதி தேர்வு மையத்தில் பணிபுரியும் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் தற்காலிகமாக மையம் மூடப்பட்டிருப்பதால் மருத்துவமனையில் பணிபுரிய திருப்பி விடப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் மருத்துவமனையின் ஷிப்ட் அட்டவணையை மீண்டும் அறிமுகப்படுத்துவதோடு மருத்துவ சேவை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிறுவனங்களும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன, இதில் ஒரு பகுதி COVID-19 அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளை பரிசோதிக்க ஒதுக்கப்பட்டுள்ளது, மற்ற பகுதி இதர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தோஃபர் கவர்னரேட்டின் சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்தில் உள்ள தொற்றுநோயியல் விசாரணைக் குழு, COVID-19 பாதித்தோர்களை தொடர்ந்து கண்காணித்து விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.