கொரோனா பரவல் எதிரொலி: இந்தியாவில் இருந்து ஓமான் பயணிக்க தடை..!!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக ஓமான் அரசானது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரையில் பயணத்தடையை அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பின்வரும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து பயணிக்கும் அல்லது இந்த மூன்று நாடுகளின் வழியாக கடந்த 14 நாட்களில் டிரான்ஸிட் விமானங்கள் மூலமாக பயணித்தவர்களுக்கு ஓமான் பயணிக்க தடை. இது ஏப்ரல் 24, 2021 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.
  • 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை. வணிக நிறுவனங்கள் இதற்கு இணங்க வேண்டும். மேலும் கடைகள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், அதன் திறனை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். இந்த விதியினை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தொலைதூர கற்றல் முறையே தொடரும். 12 ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிற்பயிற்சி மாணவர்கள் போன்ற நடைமுறைத் தேர்வுகளுக்கு வர வேண்டிய மாணவர்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொற்று நோயின் நிலைமையைப் பொறுத்து இந்த முடிவு மதிப்பாய்வுக்கு உட்பட்டது.