இந்தியாவில் இருந்து பஹ்ரைன் பயணிக்க தடை..!! யார் யாருக்கெல்லாம் விலக்கு..??
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்படைந்து பஹ்ரைன் நாட்டு அதிகாரிகளால் “சிவப்பு பட்டியலில் (red list)” சேர்க்கப்பட்டிருக்கும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் பஹ்ரைனுக்குள் நுழைய திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அரசு அறிவித்துள்ளது.
பஹ்ரைனின் சிவில் ஏவியேஷன் விவகாரங்கள் அரசாங்க செயற்குழு உத்தரவுகளுக்கு இணங்க மற்றும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மருத்துவ பணிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும். இருப்பினும் பஹ்ரைன் நாட்டு குடிமக்கள் மற்றும் ரெஸிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த தடை இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் விமானத்தில் பயணிப்பதற்கு முன்பு PCR பரிசோதனை அறிக்கையை வழங்க வேண்டும் மற்றும் பஹ்ரைன் வந்தபின் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளைத் தவிர வேறு நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளும் விமானத்தில் பயணிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட PCR சோதனைச் சான்றிதழை வழங்க வேண்டும் மற்றும் வருகையின் போதும் பஹ்ரைன் வந்த பத்தாம் நாளிலும் மற்றொரு PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் வசிக்கும் இடத்தில் அல்லது உரிமம் பெற்ற தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
அரசு நடத்தும் பஹ்ரைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பின்வருவனவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- தனிமைப்படுத்தல் மற்றும் PCR சோதனைகள் – தடுப்பூசி போடப்பட்டு, பஹ்ரைனில் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் அல்லது பஹ்ரைனில் உள்ள அதிகாரிகளால் தடுப்பூசி சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டில் இருந்து வழங்கிய சான்றிதழ் அல்லது பஹ்ரைன் நாட்டுடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தைக் கொண்ட ஒரு நாடு வழங்கிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- தனிமைப்படுத்தல் – தடுப்பூசி போடப்பட்டு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய உறுப்பு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, ஜப்பான் அல்லது சிங்கப்பூர் வழங்கிய தடுப்பூசி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.