இயல்பு நிலைக்கு திரும்பும் சவூதி.. பொது இடங்களில் முக கவசம் தேவையில்லை.. மக்கா, மதீனாவில் முழு திறனில் மக்கள் செல்ல அனுமதி..!!

சவுதி அரேபியாவில் கொரோனா பரவ ஆரம்பித்தைத் தொடர்ந்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் 17 முதல் தளர்த்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளது.

இந்த முடிவானது, தினசரி நோய்த்தொற்றுகளின் வீழ்ச்சி மற்றும் நாட்டில் அதிகளவு தடுப்பூசிகளை குடியிருப்பாளர்கள் போட்டுக்கொண்டதன் விளைவாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக சவூதியில் 50 க்கும் குறைவாகவே பெரும்பாலும் தினசரி நோய்த்தொற்றானது பதிவாகி வந்தது.

அரசு அறிவித்திருக்கும் இந்த தளர்வு நடவடிக்கைகளில் அரசாங்கம் மக்கா மற்றும் மதீனா ஆகிய சவூதி அரேபியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் இரண்டு புனித மசூதிகளில் சமூக இடைவெளி விதியினை நீக்கி தடுப்பூசியின் முழு டோஸினை எடுத்துக் கொண்டவர்களுக்கு முழு திறனுடன் வருகை புரிய அனுமதிக்கும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

மூடப்பட்ட பகுதிகள், கூட்டங்கள், போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

இனி இந்த இடங்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சமூக இடைவெளி விதிமுறை இல்லாமல் முழு திறனில் இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் திறந்த இடங்களுக்கு முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை, அதே நேரத்தில் மூடப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.