அமீரக செய்திகள்

UAE: பள்ளிகளில் முக கவசம், சமூக இடைவெளி விதிமுறைகளில் தளர்வை அறிவித்த அபுதாபி..!! புதிய விதிமுறைகள் என்ன..??

அபுதாபியில் உள்ள பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து புதிய விதிமுறைகளை அபுதாபி கல்வி மற்றும் அறிவித்துறை (Adek) வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கான கொரோனா நெறிமுறைகளில் புதிய மாற்றங்களின்படி, அபுதாபி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெளியில் விளையாட அல்லது பிற செயல்பாடுகளைச் செய்யும்போது முக கவசங்களை கழற்ற அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, பள்ளியின் அனைத்துப் பகுதிகளிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது மற்றும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் சமூக இடைவெளியைப் பராமரிக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை தனியார் பள்ளிகளுக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை (Adek) வெளிப்புற இடங்களில் மாணவர்களுக்கு சமூக இடைவெளி கட்டாயம் இல்லை என்றும் விருப்பபட்டால் இந்த விதியினை கடைபிடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நெறிமுறைகளின்படி, கிரேடு-2 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளில் இருக்கும் போது முக கவசங்களை அணிய வேண்டும். ஆனால் அவர்கள் பள்ளி வளாகத்தில் வெளியே இருக்கும்போது அணிவது கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தளர்த்தப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நர்சரிகளுக்கும் இவை பொருந்தும். அவை

>> வெளிப்புற இடைவெளிகளில் சமூக இடைவெளி இப்போது விருப்பமானது. 

>> வெளிப்புற இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை.

>> அனைத்து களப் பயணங்களும் (field trips) மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் தாங்கள் செல்லும் இடத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

>> அனைத்து பள்ளி விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் போட்டிகள் அனைத்து வயது மாணவர்களுக்கும் மீண்டும் தொடங்கலாம் (முறையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்).

>> பள்ளியில் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் 90 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும் திறனுடன் மீண்டும் தொடங்கலாம் (தற்போதைய நுழைவுத் தேவைகள் பொருந்தும்).

>> பள்ளி பேருந்துகள் இப்போது 100 சதவீத திறனில் இயக்கப்பட அனுமதி வழங்கப்படும்.

>> கொரோனா பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான தனிமைப்படுத்தலைப் பொறுத்தவரை தனிமைப்படுத்தலை நீக்கி சோதனை தேவைகளை இரண்டு வகையாக Adek பிரித்துள்ளது. 

  • 18 வயதுக்குட்பட்ட மாணவர்களாக இருந்தால் தனிமைப்படுத்தல் இல்லாமல் மாணவர்கள் 1 மற்றும் 4 வது நாட்களில் சோதனை செய்ய வேண்டும்.
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களாக இருந்தால் தனிமைப்படுத்தல் இல்லை. அதே நேரத்தில் முதல் ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் பரிசோதனை செய்ய வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!