இந்திய செய்திகள்

பயணிகளுக்கு நற்செய்தி: இரண்டு ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை துவங்கவுள்ள இந்தியா…!!

இந்தியாவில் கொரோனா பரவலால் கடந்த 2020 ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளானது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கப்படவுள்ளதாக தற்பொழுது இந்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமானச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்றும், வெளிநாட்டு வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றிற்காக இந்திய விமான நிலையங்களில் நிலையான இயக்க நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் வரும் மார்ச் 27 முதல் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சர்வதேசப் பயணத்திற்கான சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பிப்ரவரி 28 அன்று, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்தியாவில் மறு அறிவிப்பு வரும் வரை வழக்கமான சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. கடந்த இரு வருடங்களாக சர்வதேச விமான போக்குவரத்து தடை அமலில் இருந்தாலும்  ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, பஹ்ரைன், வங்கதேசம், பூடான், கனடா, எத்தியோப்பியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், கஜகஸ்தான், கென்யா, குவைத், மாலத்தீவுகள் போன்ற நாடுகளுடன் ஏர் பபுள் ஒப்பந்தம் மூலம் சிறப்பு விமான சேவைகளை தற்பொழுது வரை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் இந்த அறிவிப்பால் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா பயணிக்கும் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!