அமீரக சட்டங்கள்

அமீரக வாகன ஓட்டிகள் கவனம்.. இந்த விதியை மீறினால் 1,500 திர்ஹம் அபராதம், 6 ப்ளாக் பாய்ண்ட்ஸ்..!!

அமீரகத்தில் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பது பொதுவாக அனைவரும் தெரிந்ததுதான். இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட காலங்களில் இந்த விதிமுறைகளானது திருத்தப்பட்டு புதிய விதிமுறைகள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்றாக அஜ்மானில் அதிகபட்ச வேக வரம்பை விடவும் கூடுதலாக மணிக்கு 60 கிமீக்கு மேல் சென்றால், வாகன ஓட்டிகளுக்கு 1,500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் ஆறு கருப்பு புள்ளிகள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அஜ்மான் காவல்துறையினர் அந்த வாகன ஓட்டிகளின் வாகனங்களை 15 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அதே போல் அஜ்மான் மட்டுமல்லாது மற்ற எமிரேட்களில் உள்ள அதிகாரிகள், குறிப்பாக ரமலான் மாத காலத்தில் வேக வரம்புகளை முறையாக கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளை வலியுறுத்தியுள்ளனர்.

இஃப்தார் அல்லது தராவீஹ் தொழுகைக்கு முன் வேகமாகச் செல்வது இந்த ரமலான் மாதத்தில் போக்குவரத்து விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஸ் அல் கைமா போக்குவரத்துத் துறையின் முந்தைய ஆண்டுகளின் புள்ளிவிவரங்களின்படி, விபத்துகளுக்கான முதன்மைக் காரணங்கள், அதிக வேகம், போக்குவரத்து விதிகளுக்கு இணங்காதது மற்றும் இஃப்தார் நேரத்திற்கு முன் ரெட் சிக்னலில் நிற்காமல் செல்வது போன்றவையே என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், வியாழக்கிழமை துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக ரமலானின் மீதமுள்ள நாட்களில் மற்ற ஓட்டுநர்களிடம் பொறுமை மற்றும் நிதானத்தைக் காட்டுமாறும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!