அமீரக சட்டங்கள்

UAE: இந்த 3 காரணங்களுக்கு நீங்கள் அலுவலகங்களுக்கு பயணிக்கும் நேரமும் வேலை நேரமாக கணக்கிடப்படும்..!! அவை என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், சில சந்தர்ப்பங்களில் ஊழியர்களின் பயண நேரமானது அவர்களின் வேலை நேரத்தின் ஒரு பகுதியாக கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டத்தின் பிரிவு 17ன் கீழ், ஒரு ஊழியர் வசிக்கும் இடத்திலிருந்து வேலைக்குச் செல்வது அலுவலக நேரத்தின் ஒரு பகுதியாக கணக்கிடப்படாது என்று கூறுகிறது. இருப்பினும் நிர்வாக விதிமுறைகள் சில விதிவிலக்குகளை வழங்குகின்றன.

தொழிலாளர்களின் பயண நேரம் வேலை நேரத்தின் ஒரு பகுதியாக கணக்கிடப்படும் சில காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை:

1. மோசமான வானிலை காரணமாகவும், வானிலை மாற்றங்கள் குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் வழங்கிய எச்சரிக்கைகளுக்கு மத்தியில் ஊழியர் தாமதமாக வேலைக்கு வருதல்.

2. தொழிலாளி முதலாளி அல்லது நிறுவனம்  வழங்கிய போக்குவரத்து சேவையில் பயணம் செய்யும் போது, அது பழுதடைந்து அல்லது விபத்தில் சிக்கி கால தாமதமாக வேலைக்கு வருதல்.

3. ஊழியரின் வேலை நேரத்திற்குள் பயண நேரத்தைச் சேர்க்க முதலாளி மற்றும் தொழிலாளி இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டால்.

மேற்கண்ட மூன்று காரணங்களினால் தொழிலாளியின் பயண நேரம் வேலை நேரமாக கணக்கிடப்படும் என கூறப்படுகிறது.

சட்ட ஆலோசகர் ஒருவர் கூறுகையில், வேலை நேரத்திற்குள் பயணத்தை கணக்கிடுவது தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஊழியர்களில் பெரும்பாலோர் நீண்ட மணிநேரம் போக்குவரத்தில் செலவிடுகிறார்கள். குறிப்பாக பல நிறுவனங்கள் வேலை செய்யும் பகுதியில் இருந்து வெகு தொலைவில் செலவை குறைப்பதற்காக தொழிலாளர் தங்குமிடத்தை வழங்குகிறது”.

“வேலையின் தன்மை காரணமாக நீண்ட தூரம் வாகனம் ஓட்டுபவர்கள் அல்லது சாலை பயணத்தில் அதிக நேரத்தைச் செலவிடுபவர்களுக்கு இந்த சட்ட திருத்தம் உதவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டம் இரு தரப்பினருக்கும் ஒரு ஒப்பந்தத்தில் பொருத்தமான பணி நிலைமைகளைத் தீர்மானிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இந்த சட்டத்தின் கீழ், கடுமையான சேதம் அல்லது விபத்தைத் தடுப்பதற்கான வேலை போன்ற அவசியமான காரணங்கள் தவிர, ஊழியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மொத்தத்தில், ஊழியர்களின் மொத்த வேலை நேரம் ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் 144 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!