வளைகுடா செய்திகள்

உலகிலேயே மிக அதிக வெப்பநிலையை பதிவு செய்த வளைகுடா நாடு..!!

வளைகுடா நாடுகளில் சமீப நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பெரும்பாலும் பதிவாகி வருகின்றது. வளைகுடா நாடுகளில் கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் தற்பொழுது பூமியிலேயே மிக அதிக வெப்பநிலையை வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் பதிவு செய்துள்ளது.

குவைத்தில் இருக்கும் நகரங்களில் ஒன்றான அல் ஜஹ்ரா பூமியிலேயே மிக அதிக வெப்பநிலையான 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகளாவிய வெப்பநிலைக் குறியீட்டின்படி, அல் ஜஹ்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை பூமியில் அதிக வெப்பநிலையைப் பதிவுசெய்திருக்கின்றது. அதைத் தொடர்ந்து அல் வஃப்ரா நகரம் 49.7 டிகிரி செல்சியஸை பதிவு செய்துள்ளது.

குவைத் மற்றும் தெற்கு ஈராக்கின் சில பகுதிகள், சவூதி அரேபியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் போன்றவை, தற்போது மிகவும் வெப்பமான காற்றால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதன் தாக்கம் நடப்பு வாரம் முழுவதும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் 50 ° C க்கும் அதிகமான வெப்பநிலை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 25 அன்று, குவைத்தின் நவாசிப் நகரத்தில் 53.2 டிகிரி செல்சியஸ் பதிவானதை தொடர்ந்து உலகிலேயே அதிக வெப்பநிலையை பதிவு செய்த நகரமாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. வெப்பநிலை அதிகரித்து வருவதை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் திறந்த வெளி மற்றும் சூரியனுக்குக் கீழே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மதிய ஓய்வு இடைவேளையை அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!