அமீரக செய்திகள்

துபாய்: சாலிக் கட்டணத்தை உயர்த்த முடிவா..?? RTA கூறும் தகவல் என்ன..??

துபாயின் சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட டோல் கேட் ஆபரேட்டரான சாலிக் “Dynamic Pricing” என்று சொல்லக்கூடிய மாறும் கட்டண முறையை அறிமுகப்படுத்தலாம் என்று தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒரு நாளின் நேரத்தைப் பொறுத்து சுங்க கட்டணத்தை மேம்படுத்துவதன் மூலம் நேரத்திற்கேற்ப ஒரு கட்டணம் என செயல்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட பாதைகளில் அல்லது பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களின் போது அதிக சுங்க கட்டணம் வசூலிப்பது போன்ற வகையில் இந்த சாலிக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இந்த நடைமுறை சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவின் டல்லாஸ் ஆகிய இடங்களில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாலிக் இயக்குநர்கள் குழுவின் துணைத் தலைவர் அப்துல் முஹ்சென் கலாபத் இது பற்றி கூறுகையில், “டைனமிக் விலை நிர்ணயம் என்பது சாலிக் அமைப்பிற்குப் பயன்படுத்தக்கூடிய கருவிகளில் ஒன்றாகும். தற்போது, ​​சாலிக்கிற்கு 4 திர்ஹம் கட்டணமாக நிர்ணயித்துள்ளோம். ஆனால் பீக் ஹவர்ஸில் ஆஃப்-பீக் ஹவர்ஸை விட அதிக கட்டணம் வசூலிக்கும் மற்ற டைனமிக் அமைப்புகளானது உலகம் முழுவதும் உள்ளன. இது டைனமிக் ப்ரைசிங் என்று அழைக்கப்படுகிறது. எமிரேட்டில் தடையற்ற போக்குவரத்து என்ற பொதுவான இலக்கை அடைய RTA மற்றும் சாலிக் நடத்தும் போக்குவரத்து ஆய்வின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. இருப்பினும் இவை அனைத்தும் துபாயின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது” என்று கூறியுள்ளார்.

சாலிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இப்ராஹிம் சுல்தான் அல் ஹதாத் கூறுகையில், மாறும் விலை நிர்ணயம் என்பது எதிர்காலத்தில் வரும் எந்த மாற்றங்களையும் ஏற்றுக்கொள்வது, நெகிழ்வான கட்டணங்கள் அல்லது போக்குவரத்தை நிர்வகிப்பதற்கான டோல் கேட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று தெரிவித்துள்ளார்.

சாலிக்கின் தலைவர் மட்டர் அல் தாயர், டோல் கேட் அல்லது கட்டணங்களின் எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்பு என்பது RTA மற்றும் சாலிக் நடத்தும் ஆய்வுகளின் அடிப்படையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செயற்குழுவே இறுதி முடிவு எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவரால் வெளியிடப்பட்ட ஆணைக்கு உட்பட்டு தற்போதுள்ள டோல் கேட்களை அகற்றலாம் அல்லது மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததும் நினைவுகூறத்தக்கது. மேலும் துபாயின் நிர்வாக கவுன்சிலின் தலைவரால் வெளியிடப்பட்ட ஆணையின்படி RTA சாலிக் உடன் ஒருங்கிணைந்து விரிவான போக்குவரத்து ஆய்வை நடத்திய பிறகு புதிய டோல் கேட்களும் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் துபாயின் சாலை-கட்டண ஆபரேட்டர் சாலிக் திங்களன்று 1.5 பில்லியன் பங்குகளை அல்லது 20 சதவீத பங்குகளை சில்லறை, நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த மாதம் விற்கப்போவதாக அறிவித்துள்ளது தற்போது ஒரு முக்கிய செய்தியாக உள்ளது. சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் சாலிக் சாலை-கட்டண முறையை முதன் முதலில் 2007 இல் அறிமுகப்படுத்தியது. தற்போது வரை மொத்தம் எட்டு டோல் கேட்களும் மூன்று மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் உள்ளன. அதில் 1.8 மில்லியன் வாகனங்கள் துபாயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய சுங்கச்சாவடிகள்

நிறுவனம் இது பற்றி தெரிவிக்கையில், “ புதிய கேட்களை தடையின்றி ஒருங்கிணைக்க, அதன் செயல்பாடுகளில் தொடர்ந்து முதலீடு செய்யும் என கூறியுள்ளது. ஒரு புதிய டோல் கேட் பொதுவாக திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து செயல்படுவதற்கு சுமார் ஒன்பது முதல் 10 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் புதிய சாலிக் டோல் கேட்கள் பொதுவாக செயல்பாட்டிற்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தற்போதுள்ள அனைத்து டோல் கேட்களிலும் சூரிய சக்தி திறன்களை நிறுவ நிறுவனம் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!