அமீரக சட்டங்கள்

UAE: விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம்.. சிறைதண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் காயங்களை உண்டாக்கும் அளவிலான சாலை விபத்தை ஏற்படுத்தி விட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக அமீரகத்தின் பொது வழக்குத்துறை ஆணையம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகன ஓட்டிகள் காயம் உண்டாக்கும் அளவிலான விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கு நிற்காமல் தப்பிச் சென்றால் குறைந்தபட்ச அபராதமாக 20,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், இந்த குற்றத்திற்காக வாகன ஓட்டிகளும் சிறையில் அடைக்கப்படலாம் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது. மேலும் அதில் “பயணிகளுக்கோ அல்லது சாலையில் செல்பவர்களுக்கோ காயம் விளைவிக்கும் வகையில் ஓட்டுநரால் அல்லது ஓட்டுநருக்கு எதிராக வேறொரு வாகனத்தால் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தின் போது, எந்த ஏற்றுக்கொள்ளத்தக்க காரணமும் இல்லாமல் வாகனத்தை நிறுத்தத் தவறி, ஓட்டுநர் தப்பி சென்றால் அவருக்கு சிறைத்தண்டனை அல்லது 20,000 திர்ஹம்ஸிற்குக் குறையாத அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்” என்று பப்ளிக் பிராசிகியூஷன் தனது சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவில் கூறியுள்ளது.

இந்த அபராதமானது போக்குவரத்து தொடர்பான 1995 ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்ட எண் 21 இன் பிரிவு 49, பிரிவு 5 இல் உள்ளதன்படி விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அமீரகத்தின் போக்குவரத்துச் சட்டத்தில் உள்ள பிற விதிகளிலும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றாலும் சாலை விபத்துகளில் இருந்து தப்பியோடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் எந்தவொரு வகையிலும் மோதலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளுடன் அனைத்து நடைமுறைகளையும் முடிக்கும் வரை சம்பவ இடத்தில் காத்திருக்க வேண்டும் என்றும் ஆணையம் வாகன ஓட்டிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!