வளைகுடா செய்திகள்

சவூதி: பூட்டிய பள்ளி பேருந்தில் பல மணி நேரம் சிக்கித் தவித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கதீஃப் கவர்னரேட்டில் பள்ளிக்கு சென்றிருந்த சிறுவன் பள்ளி பேருந்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹசன் ஹஷிம் அல் ஷோலா எனும் 5 வயதான சிறுவன் பள்ளிப் பேருந்தில் இருப்பதை ஒழுங்காக கவனியாது ஓட்டுநர் பேருந்தைப் பூட்டி விட்டுச் சென்றதால் பல மணி நேரம் பேருந்தில் மூச்சுத் திணறி மயங்கி பின் உயிரிழந்துள்ளார் என்று பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கிழக்கு மாகாண கல்வித் துறையின் செய்தித் தொடர்பாளர் சயீத் அல் பஹேஸ் கூறுகையில், பேருந்தைப் பூட்டுவதற்கு முன், பேருந்துக்குள் மாணவர் யாரும் இல்லை என்பதை ஓட்டுநர் உறுதிப்படுத்தத் தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்தது என தெரிவித்துள்ளார். மேலும் அல் பஹேஸ் மாணவரின் மரணம் குறித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று சமீபத்தில் கத்தாரில் இந்தியாவைச் சேர்ந்த 4 வயதான மின்சா எனும் மாணவி பூட்டிய பேருந்தில் பல மணி நேரம் மாட்டிக்கொண்டு மூர்ச்சையாகி உயிரிழந்த சம்பவமும் அனைவரையும் சோகத்திற்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!