வளைகுடா செய்திகள்

ஓமான்: விசாவிற்காக மேற்கொள்ளும் மருத்துவ சோதனைக்கான கட்டணம் குறைப்பு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!!

ஓமானில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு ஒரு பெரிய சலுகையாக, நவம்பர் 1, 2022 முதல் ஓமானில் ரெசிடென்ஸ் பெர்மிட்டைப் பெறுவதற்காக தனியார் சுகாதார நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான சில மருத்துவ சோதனை கட்டணங்களை தள்ளுபடி செய்ய சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய திருத்தங்களின்படி, மருத்துவ சோதனை செய்யவிருக்கும் ஒரு வெளிநாட்டவர் 30 ரியால் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அவரின் பரிசோதனைக்கான கோரிக்கையை சனத் அலுவலகங்கள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள் தனியார் மருத்துவப் பரிசோதனை மையங்களில் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனையானது பின் சுகாதார அமைச்சகத்தினால் எலக்ட்ரானிக் முறையில் அங்கீகரிக்கப்பட்டு 24 மணி நேரங்களுக்குள் வெளிநாட்டினருக்கு முடிவுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஓமானிற்கு வரும் வெளிநாட்டினரின் நலன் கருதி, சுகாதார அமைச்சகம் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், சுகாதார மையங்களில் வெளிநாட்டினரின் மருத்துவ சோதனைக்கான கட்டணத்தை குறைக்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 1, 2022 முதல் ஓமானில் உள்ள நிறுவனங்கள் புதிய ரெசிடென்ஸ் பெர்மிட் அல்லது ரெசிடென்ஸ் விசாவை புதுப்பிக்கும் நோக்கத்திற்காக தனியார்   சுகாதார மையங்களில் வெளிநாட்டினருக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனை கட்டணத்தை குறைக்க சுகாதார அமைச்சரான டாக்டர் ஹிலால் பின் அலி அல்-சப்தி உத்தரவிட்டுள்ளார்” என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தனியார் சுகாதார நிறுவனங்களில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான முந்தைய நெறிமுறைகளில், சுகாதார அமைச்சகம் மருத்துவ சோதனைகளை அங்கீகரிப்பதற்காக கட்டணங்களைச் செலுத்துவதோடு, தனியார் சுகாதார நிறுவனத்திற்கு மருத்துவ பரிசோதனைக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!