வளைகுடா செய்திகள்

சவூதியில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்கள்.. பள்ளிகள் மூடல்.. விமானங்கள் தாமதம்..

வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை தற்சமயம் அனைத்து நாடுகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதில் இன்று (வியாழக்கிழமை) சவூதி அரேபியாவின் ஜித்தா பகுதி முழுவதும் கனமழை பெய்து சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்ததன் காரணமாக மழை பெய்த பகுதிகளில் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

சவூதி பிரஸ் ஏஜென்சியின் கூற்றுப்படி, மக்கா பகுதி முழுவதும் மழையின் காரணமாக இன்று ஜித்தா, ராஃபிக் மற்றும் குலைஸ் ஆகிய இடங்களில் உள்ள பொது, தனியார் மற்றும் சர்வதேச பள்ளிகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல விமானங்கள் மோசமான வானிலையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு சில விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்த வீடியோக்களும் வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த பகுதிகளில் தேவையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், மழைநீரில் தேங்கி நிற்கும் இடங்களில் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதே போன்று அமீரகத்திலும் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு சாலைகளில் மழைநீர் தேங்கும் அளவு கனமழை பெய்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!