வளைகுடா செய்திகள்

ஓமானில் தேசிய விடுமுறை.. 121 கைதிகளுக்கு மன்னிப்பு.. ஓமான் சுல்தான் ஹைதம் அரியணை ஏறிய தினத்தை முன்னிட்டு அறிவிப்பு..!

ஓமானில் மாண்புமிக்க சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் ஆட்சிக்கு வந்த ஜனவரி 11ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சுல்தான் ஹைதம் அவர்கள் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு ஓமான் முழுவதும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.

இதனையொட்டி சுமார் 121 சிறைக் கைதிகளுக்கு மாண்புமிக்க சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் சிறப்பு மன்னிப்பை வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்களில் 57 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த சிறப்பு மன்னிப்பு அவர் ஆட்சிக்கு வந்த தினத்துடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.

இது குறித்து வெளியான தகவலின்படி, மாண்புமிகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் அரியணையில் அதிகாரப்பூர்வமாக அமர்ந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக ஜனவரி 12 ஆம் தேதி தேசிய விடுமுறை தினமாக ஓமானில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது பொது மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும் என்று ஓமானின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் அரை நூற்றாண்டாக ஓமானை ஆட்சி செய்து வந்த சுல்தான் கபூஸ் பின் சைத் கடந்த 2020இல் உயிரிழந்தார். அவரது மரணத்தையடுத்து சுல்தான் ஹைதம் 2020 இல் பதவியேற்றார். பின்னர் ஹைதம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தை முன்னிட்டு 2022இல் நடைபெற்ற விழாவில், கொரோனா தொற்றுநோய் பரவலின் போது ஏற்பட்ட சவால் மிகுந்த வீழ்ச்சிகளுக்கு மத்தியிலும் தனது ஆட்சியில் வழங்கிய வேலை வாய்ப்புகளைப் பற்றி சுல்தான் ஹைதம் பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!