அமீரக சட்டங்கள்

UAE: 30 நாட்களுக்கு விசிட் விசா நீட்டிப்பு.. ரெசிடென்ஸி விசாவிற்கு புதிய விதி உள்ளிட்ட 15 சேவைகளை நடைமுறைக்கு கொண்டு வந்த ICA..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், சுங்கம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையம் (ICA), அதன் ஸ்மார்ட் சேவைகள் அமைப்பின் மூலம் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதாக அறிவித்து அதற்கான புதுப்பிப்புகளின் புதிய தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய தொகுப்பில் விசிட், ரெசிடென்ஸி உள்ளிட்ட விசாக்களுக்கான திருத்தப்பட்ட நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ICA-வானது கடந்த பிப்ரவரி 1, 2023 இல் அதன் ஸ்மார்ட் சேவை அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட 15 சேவைகளின் பட்டியலை ஏற்றுக்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிப்புகளில் ரெசிடென்ஸி விசாக்களை புதுப்பிப்பதற்கான மாற்றங்களும் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

புதுப்பிக்கப்பட்ட சேவைகளில் முக்கியமானவை:

90 நாள் விசிட் விசாவை வைத்திருக்கும் நபர்களுக்கு ஒரு முறை மீண்டும் 30 நாட்களுக்கு விசாவை நீட்டிப்பு செய்யும் புதிய சேவையை அறிமுகப்படுத்துவது இந்த முக்கிய புதுப்பிப்புகளில் ஒன்றாகும். இதற்கு முன்னர்  விசிட் விசாவை நீட்டிக்க நாட்டை விட்டு வெளியேறுவது கட்டாயம் என அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரெசிடென்ஸி விசாவிற்கான செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களுக்கும் அதிகமாக இருந்தால் விசாவை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் புதிய நடைமுறையின்படி தடுக்கப்படும்.

மேலும் ஒரு உறவினர் அல்லது நண்பரின் விசிட் விசாவை 30, 60 மற்றும் 90 நாட்களுக்கு ஒரு முறை நுழைவு (single entry) அல்லது பல முறை நுழைவிற்கு (multiple entries) நீட்டித்தல் மற்றும் விசாக்களின் முன் நுழைவு செல்லுபடியை (pre entry validity) நீட்டிக்கும் சேவைகளும் இந்த பட்டியலில் அடங்கும்.

சமீபத்தில் விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடியின் விலையில் சேர்க்கப்பட்ட 100 திர்ஹம்ஸ் ஸ்மார்ட் சேவைக் கட்டணமும் அங்கீகரிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

அது போலவே 6 மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே தங்கியிருக்கும் ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர்களுக்கான ரீஎன்ட்ரி சேவையை ஸ்மார்ட் சிஸ்டத்தில் ICA இணைத்துள்ளது.

60 நாட்கள் மற்றும் 180 நாட்களுக்கு சிங்கிள் என்ட்ரி அல்லது மல்டி என்ட்ரி என சுற்றுலா, சிகிச்சை மற்றும் நோயாளியுடன் இருப்பதற்காக அமீரகத்திற்கு வருகை தரும் குடும்பத்திற்கு விசா வழங்குவதற்கான சேவை ஸ்மார்ட் சிஸ்டத்தில் உள்ள பிற புதுப்பிப்புகளில் அடங்கும்.

புதுப்பிக்கப்பட்ட சேவைகளில் சில வகையான ரெசிடென்ஸி தொடர்பான தொழில்களின் வகைப்பாட்டுடன் இரட்டையர்களின் ரெசிடென்ஸி தரவை திருத்துவதும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் எமிரேட்ஸ் ஐடி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட GCC நாடுகளின் குடிமக்களுக்கான விசா தகவலை ரத்து செய்வதற்கும் திருத்துவதற்கும் ICA புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து ICA-வின் அதிகாரியான மேஜர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி கூறுகையில் “ஸ்மார்ட் சேவைகளின் வளர்ச்சியானது எதிர்காலத்திற்கான அதன் கண்ணோட்டத்தின் கட்டமைப்பிற்குள் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு புதிய செயல்முறையை பிரதிபலிக்கிறது. அரசாங்கங்களின் எதிர்கால வழிகாட்டுதல்களைப் படிப்பது, வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்துகொள்வது மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எளிதான மற்றும் விரைவான வழிகளில் அவர்களைச் சந்திப்பதையும் இது குறிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!