இந்திய செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்வோர் கவனத்திற்கு.. அக்டோபர் 25 முதல் புதிய நெறிமுறை அமல்.. இந்திய அரசு உத்தரவு..!!

கோவிட் -19 தொற்றுநோயின் உலகளாவிய பரவல் தொடர்ந்து குறைந்து வருவதாலும், உலகளாவிய அளவில் தடுப்பூசியின் பயன்பாடு உயர்ந்திருப்பதாலும் தொற்றுநோயின் மாறும் தன்மைக்கு ஏற்ப, சர்வதேச நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான தற்போதைய வழிகாட்டுதல்களை இந்திய அரசு மதிப்பாய்வு செய்துள்ளது. இந்த புதிய நெறிமுறைகள் வரும் அக்டோபர் 25 ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட் -19 தொற்றுநோயின் உலகளாவிய பரவல் சில பிராந்திய மாறுபாடுகளுடன் தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும் கொரோனா வைரஸின் தொடர்ச்சியான தன்மையை கண்காணிக்க வேண்டியது அவசியம். மற்றும் SARS-CoV- இன் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்வில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில், “சர்வதேச வழிகாட்டுதலுடன் 17 பிப்ரவரி 2021 அன்று வெளியிடப்பட்டு தற்பொழுது வரை நடைமுறையில் இருக்கும் இந்தியா வரும் பயணிகளுக்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையை உருவாக்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சர்வதேச நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான தற்போதைய வழிகாட்டுதல்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.” என கூறப்பட்டுள்ளது.

அதனுடன் திருத்தப்பட்ட நெறிமுறைகளை சர்வதேச பயணிகள் மற்றும் விமான நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், இந்த மதிப்பாய்வு செய்யப்பட்ட நடைமுறைகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நில எல்லைகள் உள்ளிட்ட பயணிகள் உள்வரும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவின் படி, அனைத்து பயணிகளும் திட்டமிட்ட பயணத்திற்கு முன் ஏர் சுவிதா ஆன்லைன் போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும், பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை கோவிட் -19 RT PCR அறிக்கையை பதிவேற்ற வேண்டும். மற்றும் ஒவ்வொரு பயணியும் அறிக்கையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய பிரகடன படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன், வீட்டு தனிமைப்படுத்தல் அல்லது சுய-சுகாதார கண்காணிப்பு தொடர்பான அரசின் நெறிமுறைகளுக்கு இணங்குவதற்கான உத்தரவாதத்தை ஆன்லைன் போரட்டலில் அலலது சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மூலம் இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கொடுக்குமாறும் கூறியுள்ளது.

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது WHO வால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பது குறித்து இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த நாடுகள் உள்ளன. இத்தகைய நாடுகள் A வகையை சார்ந்த நாடுகளாக இந்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் செய்யப்பட்ட இத்தகைய நாடுகளிலிருந்து வரும் இந்தியர்களுக்கு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் இல்லாத நுழைவை வழங்கும் சில தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன.

இந்தியாவுடன் WHO அங்கீகரித்த கோவிட் -19 தடுப்பூசிகளை அங்கீகரிப்பது தொடர்பான பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொண்ட A வகையை சார்ந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு பயணி வந்தால், அவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவராக இருந்தால், அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். இந்தியா வந்தடைந்த நாளிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகு அவர்களின் ஆரோக்கியத்தை அவர்கள் சுய கண்காணிப்பு செய்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று, A வகை நாட்டிலிருந்து தடுப்பூசியின் ஒரு டோஸ் அல்லது தடுப்பூசி போடப்படாத பயணி வந்தால், பயணிகள் வருகைக்குப் பிறகு கோவிட் -19 சோதனைக்கு மாதிரி சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அதன் பிறகு அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இந்தியா வந்தடைந்த நாளிலிருந்து 8 வது நாளில் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும். முடிவு எதிர்மறையாக இருந்தால், மேலும் அடுத்த 7 நாட்களுக்கு அவர்களின் உடல்நலத்தை சுய கண்காணிப்பு செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருக்கும் சுகாதார அதிகாரிகளால் அனைத்து பயணிகளுக்கும் உடல் ரீதியான சமூக இடைவெளி மற்றும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் டிபோர்டிங் செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் நிரப்பப்பட்ட சுய அறிவிப்பு படிவத்தை விமான நிலைய சுகாதார ஊழியர்களிடம் காட்ட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தெர்மல் ஸ்கிரீனிங்கின் போது கொரோனா தொற்று அறிகுறி இருப்பதைக் கண்ட பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார நெறிமுறைப்படி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். சோதனையில் நேர்மறை முடிவை பெற்றால், அவர்களின் தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறையின்படி தொடர்பில் இருந்தவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை முடிவில் நேர்மறை முடிவை பெற்ற பயணியின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலில், ஒரே வரிசையில் அமர்ந்திருக்கும் சக பயணிகள், அப்பயணி அமர்ந்திருந்த இருக்கைக்கு 3 வரிசைகள் முன்னால் அமர்ந்திருக்கும் பயணிகளும் மற்றும் 3 வரிசைகள் பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகளும் மற்றும் அப்பயணியுடன் தொடர்பில் இருக்கும் கேபின் குழுவினரும் உள்ளனர்.

வீட்டு தனிமைப்படுத்தல் அல்லது சுய-சுகாதார கண்காணிப்பின் கீழ் உள்ள பயணிகள், COVID-19 ஐக் குறிக்கும் அறிகுறிகள் தென்பட்டால் அல்லது COVID-19 க்கு மீண்டும் சோதனை செய்யும் போது நேர்மறை சோதனை முடிவை பெற்றால் உடனடியாக சுய தனிமைப்படுத்தி, தங்கள் அருகில் உள்ள சுகாதார வசதிக்குத் தெரிவிக்கலாம் அல்லது தேசிய உதவி எண்ணுக்கோ (1075) அலலது மாநில உதவி எண்ணுக்கோ அழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர பயணிகள் விமானம் ஏறுவதற்கு முன், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை சம்பந்தப்பட்ட தகவல்களை விமான நிறுவனங்கள்/ஏஜென்சிகளால் பயணிகளுக்கான டிக்கெட்டுகளுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘ஏர் சுவிதா’ போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து, எதிர்மறை RT PCR சோதனை அறிக்கையை பதிவேற்றிய பயணிகள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் ஏறும் நேரத்தில், அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே வெப்ப பரிசோதனைக்குப் பிறகு ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பயணிகளும் தங்கள் மொபைல் சாதனங்களில் ஆரோக்ய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமான நிலையங்கள் மற்றும் விமானங்கள் மற்றும் ட்ரான்சிட் பயணத்தின் போது பயணிகள் பின்பற்றப்பட வேண்டிய கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் விமானத்தில் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தற்போது இந்தியாவுடன் அத்தகைய ஒப்பந்தம் செய்யப்படாத நாடுகளும் உள்ளன. இருப்பினும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது WHO வால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்ட இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இது தவிர, குறிப்பிட்ட நாடுகளிலிருந்து அதாவது COVID-19 தொற்றுநோய் பாதிப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படும் நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள் மேலும் சில தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, உலகெங்கிலும் உள்ள COVID-19 இன் வளர்ந்து வரும் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள அத்தகைய குறிப்பிட்ட நாடுகளின் பட்டியல் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையதளங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான இணையதள லிங்க் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் ஏர் சுவிதா போர்ட்டலின் இணையதளம் ஆகியவற்றிலும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய பட்டியலின்படி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் ஆபத்து அதிகம் உள்ள நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் வருகைக்குப் பிந்தைய சோதனை உட்பட இந்தியாவிற்கு வருகை தரும் போது கூடுதல் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!